×

அரசு பஸ்சில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்க தயார்-அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

சென்னை : கொரோனா நோயாளிகளுக்கு அரசு பேருந்துகளில் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்க தயார் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்  தலைமையில், நேற்று பல்லவன் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, மற்றும் அனைத்துப் போக்குவரத்து மேலாண் இயக்குநர்கள், முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின், நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தார். நான் நேரடியாக பல பெண்களிடம் பேசும் போது ஒரு நாளைக்கு ரூ.70 மிச்சமாகிறது என தெரிவித்தார்கள்.  

மேலும், அனைத்து அதிகாரிகளையும் அழைத்து, போக்குவரத்து துறையில் இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பது, தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டு சக்கர வாகனம் எத்தனை, மூன்று சக்கர வாகனம் எத்தனை, புதிய பேருந்துகள் எவ்வளவு வாங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தெரிந்துகொள்வதற்கான கூட்டம் தான் இது. தமிழக பேருந்துகளில் 1 கோடியே 60 லட்சம் பேர் பயணம் செய்து கொண்டு இருந்தார்கள். கொரோனா தொற்றுக்கு பிறகு 90 லட்சம் பேர் தான் பயணிக்கிறார்கள்.

அதேபோல், பேருந்துகளில் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட முதல்வரிடம் பேசி ஆவன செய்வதற்கு போக்குவரத்துத்துறை தயாராக உள்ளது. தமிழகம் முழுவதும் 6,628 நகர்புற பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில், தற்பொழுது 1,400 சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்கள் பயணித்திட அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்தப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, பல வழித்தடங்களில் விரைவில் விரிவுப்படுத்தப்படுவது குறித்து பரிசீலனையில் உள்ளது. முழு ஊரடங்கு முடிந்த பின்னர், கூடுதல் பேருந்துகள் இயக்கிட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நிர்பயா திட்டத்தின் கீழ் அனைத்துப் பேருந்துகளிலும் கேமராக்கள் பொருத்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Tags : Minister ,Rajakapan ,Government ,Corona , Chennai: The Minister of Transport is ready to treat corona patients with oxygen in government buses
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...