நூல் விலையேற்றம், தொழிலாளர் தட்டுப்பாடு திருச்செங்கோடு பகுதியில் ₹5 கோடி துணிகள் தேக்கம்-15 நாள் உற்பத்தியை நிறுத்த முடிவு

திருச்செங்கோடு :  நூல் விலையேற்றம், தொழிலாளர் தட்டுப்பாடு மற்றும் வெளிமாநிலத்துக்கு விற்பனைக்கு அனுப்ப முடியாததால், திருச்செங்கோட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ₹5 மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளது. இதையடுத்து 15 நாட்கள் உற்பத்தியை நிறுத்தவும், தமிழக அரசு 2 மாத மின் கட்டணத்தை ரத்து செய்யவேண்டும் என  உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம், ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் திருச்செங்கோட்டில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.  திருச்செங்கோடு, சூரியம் பாளையம் சிறு  விசைத்தறியாளர்கள் சங்கத்தின் கீழ், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றது.

நாள்தோறும்  ஏறிவரும் நூல் விலை, கொரோனா காலத்தில் தொழிலாளர்கள் தட்டுப்பாடு, உற்பத்தி செய்த  துணிகளை வேறு மாநிலங்களுக்கு அனுப்ப முடியாத நிலை என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுமார் ₹5 கோடி மதிப்பிலான உற்பத்தி செய்த துணிகள் தேக்கம்  அடைந்துள்ளன. இனியும் உற்பத்தி செய்தால் பெரும் நஷ்டம் அடைய வேண்டிய சூழல் ஏற்படும். இதையடுத்து சூரியம்பாளையம் சிறு  விசைத்தறியாளர்கள் சங்கத்தின் சார்பில், துணி உற்பத்தியை நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் பொருளாளர் ரவி கூறுகையில், திருச்செங்கோடு, சூரியம்பாளையம் பகுதியில் நேற்று (13ம்தேதி) துவங்கி, 15 நாட்களுக்கு  துணி உற்பத்தியை நிறுத்தியுள்ளோம். நாள்தோறும் ஏறும் நூல் விலை,  மின்சார கட்டணம், கொரோனா காலத்தில் தொழிலாளர்கள் தட்டுப்பாடு ஆகிய பிரச்னைகளில் சிக்கி விசைத்தறியாளர்கள் மிகவும் சிரமத்திற்கு  உள்ளாகியுள்ளனர்.

எனவே அரசு இரண்டு மாத மின்கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். முதல்வர்  ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.  மாதம் ஒருமுறை நூல் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும், தேக்கமடைந்து  துணிகளை வெளிமாநிலங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories:

More
>