ஆட்டோ சேவை கொரோனா நோயாளிகளுக்கு இலவசம்-மதுரையில் பெருகும் மனிதநேய டிரைவர்கள்

மதுரை : மதுரை செல்லூரை சேர்ந்தவர் ராஜா(29). சமீபத்தில் திருமணமானவர். ஆட்டோ டிரைவரான இவர், கொரோனா நோயாளிகள் உள்ளிட்ட அரசு மருத்துமவனைக்கு வரும் நோயாளிகளை இலவசமாக ஏற்றி வந்து இறக்கி சேவை வழங்கி வருகிறார்.

ராஜா கூறும்போது, ‘‘அப்பா கொத்தனார், அம்மா தறி நெய்பவர். வாழ்க்கையில் கஷ்டத்தை அனுபவித்தவன். மதுரை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக காலை 7 மணி முதல் பகல் ஒரு மணி வரை வேலை செய்கிறேன். குடும்ப வருவாய்க்காக மாலை துவங்கி இரவு வரை ஆட்டோ ஓட்டி வந்தேன். கொரோனா உள்ளிட்ட நோய்களால் பாதித்து அன்றாடம் தவித்து வரும் மக்களின் அவதியை, வேதனையை நான் தினந்தோறும் கண்ணால் கண்டு வருகிறேன். எனவே ஏதாவதொரு உதவி செய்ய விரும்பினேன்.

தற்போது ஆட்டோ ஓட்டக்கூடாது என வீட்டில் நிறுத்தச் செய்து விட்டனர். மருத்துவமனைக்கு வரும் கொரோனா நோயாளிகள் மற்றும் பிற நோயாளிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். தனியார் ஆம்புலன்ஸ் பல ஆயிரம் பணம் கேட்கின்றனர். எனவே மக்களின் கஷ்டத்தில் பங்கெடுக்கும் வகையில் எனது ஆட்டோவை இலவச ஆட்டோவாக மாற்றி ஓட்டி வருகிறேன்.

கட்டாயப்படுத்தி தரும் சிறு தொகையை, ஆட்டோவை கிருமிநாசினியால் சுத்தப்படுத்துவது, வருபவர்களுக்கு சானிடைசர் தருவது, முகக்கவசம் வழங்குவது போன்றவற்றிற்கு செலவிடுகிறேன். மதுரைக்குள் 93608 45084 என்ற எண்ணில் அழைக்கும் நோயாளிகளுக்கு எப்போதும் உதவுவேன்’’ என்றார்.

ஏற்கனவே மதுரையில் ஆட்டோ டிரைவர்கள் குருராஜ், அன்புநாதன் உள்ளிட்டோர், கொரோனா நோயாளிகளுக்கான இலவச ஆட்டோ சேவை வழங்கி வரும் நிலையில், தற்போது ராஜாவும் இந்த சேவையை துவக்கியுள்ளார்.

Related Stories:

>