திண்டுக்கல் ஜிஹெச்சில் அனைத்து வசதிகளும் விரைவில் செய்யப்படும்-அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

திண்டுக்கல் :  திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கான அன்னதான திட்டத்தை துவக்கி வைத்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது, ‘தமிழகம் முழுவதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தினமும் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை தினமும் 5000 பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள், அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தின் மருத்துவத்துறைக்கு என்ன வசதி தேவை என்பதை நான் கேட்டு உள்ளேன். அவர்கள் பட்டியலை தந்தவுடன் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முதல்வரும் உத்தரவிட்டுள்ளார். இந்த காலத்தில் யார் உயிரும் போகக்கூடாது. அனைத்து உயிரும் தன்னுயிர்போல் காக்க வேண்டுமென முதல்வர் உத்தரவின் பேரில் நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

நோயாளிகளுக்கும் அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும். இந்த நேரத்தில் டாக்டர்கள், செவிலியர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். அவர்களை பாராட்டுகிறேன். இந்த பணியை மேலும் செய்வதற்கு நாங்கள் ஊக்கமும், உற்சாகமும் அளிப்போம்’ என்றார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் விஜயலட்சுமி, மருத்துவக்கல்லூரி டீன் விஜயகுமார், இணை இயக்குனர் சிவக்குமார் டிஆர்ஓ கோவிந்தராஜூ, இந்து சமய அறநிலை துறை மண்டல இயக்குனர் பாரதி, திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி, பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார், உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>