கொரோனாவால் வெளிமாநில விற்பனை ‘கட்’ பிளம்ஸ் விலை கடும் சரிவு-கொடைக்கானல் விவசாயிகள் கவலை

கொடைக்கானல் : வெளிமாநில விற்பனை இல்லாததால் கொடைக்கானலில் பிளம்ஸ் பழங்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் ‘ஏழைகளின் ஆப்பிள்’ என அழைக்கப்படும் பிளம்ஸ் பழங்கள் அதிகம் விளைவிக்கப்படுகிறது.

இவை மே மாதத்தில் மகசூல் செய்யப்படும். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது பிளம்ஸ் பழ சீசன் துவங்கியுள்ளது. இங்கு விளையக்கூடிய பிளம்ஸ் பழங்கள் மதுரை, சென்னை, திருச்சி என தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

குறிப்பாக, கேரளாவில் இப்பழத்திற்கு அதிக கிராக்கி உள்ளதால் நல்ல விலை கிடைக்கும். இதன்மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைத்து வந்தது.

தற்போது தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு உத்தரவால், வெளிமாநிலங்களுக்கு வாகன போக்குவரத்து இல்லாத நிலை உள்ளது. இதனால், வெளிமாநில விற்பனை முடங்கி விட்டது. வழக்கமாக கிலோ ரூ.250 வரை விற்ற பிளம்ஸ் பழங்கள் தற்போது ரூ.75 அளவிற்கு மட்டுமே விலை போகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இருப்பினும் ஊரடங்கு முடிந்து போக்குவரத்து சீரானதும் மீண்டும் நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். கொடைக்கானலில் இம்மாத இறுதி வரை பிளம்ஸ் மகசூல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>