கொரோனா பாதித்தவர்களை சித்த மருத்துவத்தால் முழுமையாக குணப்படுத்தலாம் கபசுர குடிநீர், வசந்தகுசுமாகர மாத்திரை தொற்று ஏற்படாமல் தற்காத்து கொள்ள உதவும்

* சித்தா, ஆங்கில மருத்துவ சிகிச்சை பெறுவோருக்கு  நுரையீரல் தொற்று வேகமாக குறைவு

* சித்தா சிகிச்ைசயால் ஆக்சிஜன் அளவு படிப்படியாக அதிகரிப்பு

* அரசு சித்த மருத்துவ வல்லுனர்கள் ஆய்வில் முடிவு

சென்னை: கொரோனா நோய் பாதித்தவர்களை சித்த மருத்துவத்தால் முழுமையாக குணப்படுத்தலாம் என்று  அரசு சித்த மருத்துவ வல்லுனர்கள் ஆய்வில் முடிவு தெரியவந்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றின் குறிகுணங்களுக்கு ஏற்ப சித்த மருத்துவத்தில் எந்த மருந்துகளைக் பயன்படுத்தினால், அது நோயாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்ற அடிப்படையில் ஆய்வு ஓமந்தூரார் அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு இந்திய மருத்துவத்துறை இயக்குனர் கணேஷ் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து மருத்துவர்கள் மல்லிகா, சித்ரா ஆகியோரது ஆய்வின் விவரங்கள் : இந்தியாவில் கொரோனா 2வது அலை வீசிக்கொண்டிருக்கிறது. ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள இன்ஸ்டிடியூஷனல் எத்திக்கல் கமிட்டியிடம் (IEC) ஒப்புதல் பெற்று சென்ட்ரல் டிரையல் ரெஜிஸ்ட்ரி ஆப் இந்தியாவில் (CTRI) முறையாக பதிவுசெய்யப்பட்டு கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா முதல் அலை இருந்த நேரத்தில், முழு ஊரடங்கு நேரத்தில் நான்கு பேர் கொண்ட மருத்துவக் குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் 100 பேர் கொண்ட சிறு, மிதமான அறிகுறிகளைக் கொண்ட கொரோனா நோயாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில், ஒரு பிரிவினருக்கு தமிழக அரசு பரிந்துரைத்த ஆங்கில மருந்துகளும், இன்னொரு பிரிவினருக்கு ஆங்கில மருந்துகளுடன் சித்த மருந்துகளும் வழங்கப்பட்டது. அவர்கள் விரைவாக கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 60 நோயாளிகளில் யாரும் இறக்கவில்லை. சித்த மருத்துவம் மேற்கொள்ள ஆரம்பித்தவுடன் உடலில் ஆக்சிஜன் அளவு குறையாமல் படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்தது. இந்த ஆய்வில் முக்கியமான விஷயமே இதுதான். இறுதியாக இந்த ஆய்வின் முடிவானது சித்த மருத்துவத்துடன் ஆங்கில மருத்துவம் சேர்த்து கொடுக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் அதிவேகமாக குணமாகி உள்ளனர் என்பது ஆய்வின் மிகவும் நம்பிக்கையூட்டும் முடிவாக அறியப்பட்டது. இந்த ஆய்வின் முடிவினை ஜர்னல் ஆப் ஆயுர்வேதா அண்ட் இன்டகிரேட்டிவ் மெடிசன் (JAIM) என்னும் சர்வதேச நாளேட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பிரசுரமானது.

இப்போது கொரோனா நோய் அதிதீவிரமான நிலையில் இருப்பதால் மக்கள் சித்த மருத்துவத்தையும் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம் என்ற விழிப்புணர்வை கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே இந்த ஆராய்ச்சியின் நோக்கமாகும். இந்த நோயைத் தடுக்க கபசுரக் குடிநீர் மட்டும் போதுமானதாக இல்லை. எங்களை நாங்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை. எங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. காரணம் என்னவென்றால் வசந்தகுசுமாகர மாத்திரை ஒன்றுடன் கபசுரக்குடிநீர் எடுத்துக் கொண்டோம். அதனால் இன்றுவரை எந்த நோய்த் தொற்றும் எங்களுக்கு ஏற்படவில்லை. கொரோனா தொற்று என்பது கபம் தொடர்பான நோய் என்பதால் மக்கள் முறையாக படித்து பட்டம்பெற்ற சித்த மருத்துவர்கள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவர்களின் உதவியை நாடலாம் என டாக்டர்கள் கூறினர்.

கர்ப்பிணிகள் இந்த மாத்திரையை சாப்பிடலாமா?

காய்ச்சல், இருமல், சளி, தொண்டை  வலி போன்ற பாதிப்புகள் இருப்பவர்கள் அறிகுறி ஏற்பட்ட ஆரம்பத்திலேயே கபசுரக்  குடிநீருடன், வசந்தகுசுமாகர மாத்திரையும் சேர்த்து எடுத்துக் கொண்டால்  கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மீண்டு விடலாம். இந்த மருந்துகளை குழந்தைகள்  முதல் பெரியவர்கள் வரை மட்டுமல்ல கர்ப்பிணிகளும் கூட எடுத்துக் கொள்ளலாம். நோயாளியின் எடை மற்றும் வயது, நோய் குறிகுணங்களுக்கு ஏற்ப சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

நோயாளிகள் 4 வகையாக பிரிப்பு

கொரோனா நோயாளிகளை அவர்களின்  குறிகுணங்களைப் பொறுத்து ஏ சிம்டமேடிக், மைல்ட், மாடரேட், சிவியர் என  நான்கு பிரிவுகளாக பிரிப்பது வழக்கம். இந்த ஆராய்ச்சிக்காக  தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளில் மைல்ட், மாடரேட் அறிகுறிகள்  உள்ளவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

கூட்டு மருந்து சிகிச்சை 78% பலன்; ஆங்கில மருத்துவ சிகிச்சை 33%

ஆய்வு முடிவில் சித்த மருந்துகளுடன் கூடிய  ஆங்கில மருத்துவம் எடுத்துக் கொண்ட 60 பேரை 11 முதல் 14 நாட்களில்  ஆர்டிபிசிஆர், ரேபிட் பரிசோதனை செய்ததில் 78.33 சதவீதம் நெகட்டிவ் ரிசல்ட்  கிடைத்தது. அதே நேரம் ஆங்கில மருத்துவத்தை மட்டுமே மேற்கொண்ட 30 பேரை ஆய்வு  செய்ததில் 33.3 விழுக்காடு மட்டுமே நெகட்டிவ் ரிசல்ட் கிடைத்தது. 60  நோயாளிகளில் 47 நோயாளிகளுக்கு 11 முதல் 14 நாட்களில் கொரோனா நோய்த் தொற்று  இல்லை. மீதமுள்ள 13 நோயாளிகளுக்கு நோய்த் தொற்று ஏன் குணமாகவில்லை என்று  ஆராய்ந்ததில் கொரோனாவில் இருந்து குணமாகி இருந்தனர்.

ஆனால் அவர்களுக்கு இணை நோய்களான ஆஸ்துமா, சைனஸ், அலர்ஜி இருந்தது. இதனால் அவர்கள் சாப்பிட்ட குளிர்ச்சியான உணவுகளான  எலுமிச்சை, நெல்லிக்காய், மாதுளைச் சாறுகள் மற்றும் தயிர் போன்றவற்றை  உண்டதுடன் குளிர்சாதனப்பெட்டி இருக்கும் அறையில் அவர்கள் சளி, காய்ச்சலுக்கான காரணம்  என்பதைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளித்தோம். நுரையீரல் தொற்று வேகமாக குறைந்திருந்தது. சித்த மருத்துவம் மேற்கொண்ட 25  நோயாளிகளுக்கு ரத்தம், கல்லீரல், சிறுநீரகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

Related Stories:

>