குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து மாணவி பலாத்காரம்: நெல்லை சட்டக்கல்லூரி பேராசிரியருக்கு வலை

நெல்லை: குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்த சட்டக்கல்லூரி பேராசிரியரை போலீசார் தேடி வருகின்றனர். பாளையங்கோட்டை, சாந்திநகர் போலீஸ் காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ் பாரதி (32). நெல்லை அரசு சட்டக்கல்லூரி தற்காலிக பேராசிரியர். இவருக்கும் மூன்றாம் ஆண்டு படிக்கும் நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவிக்கும் ஆன்லைனில் பாடம் நடத்தும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் ஊருக்கு செல்வதற்காக மாணவி, நெல்லை பஸ் நிலையத்தில் நின்றுள்ளார். அப்போது அவ்வழியாக காரில் வந்த பேராசிரியர், ஊரில் விட்டு விடுவதாக கூறி ஏற்றிச் சென்றுள்ளார். வழியில் அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாளை. ரெட்டியார்பட்டி மலையடிவாரத்துக்கு அழைத்துச் சென்று அவரை, பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், ஆபாசமாக படமெடுத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் அந்த படத்தை காட்டி மிரட்டி ரமேஷ்பாரதி அவரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாராம்.

தற்போது முழு ஊரடங்கு என்பதால் மாணவி நாகர்கோவிலில் உள்ள தனது வீட்டில் இருந்து வருகிறார். அவருக்கு ரமேஷ்பாரதி போன் செய்து தன்னுடன் வருமாறு கூறியதாகவும், அதற்கு மாணவி மறுக்கவே, ஆத்திரமடைந்த அவர், ‘நீ வரவில்லை என்றால் உனது ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன். கல்லூரியை விட்டு நீக்கி விடுவேன்’ என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன மாணவி, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இதையடுத்து நெல்லை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் ரமேஷ்பாரதி மீது வழக்கு பதிவு செய்தனர். ரமேஷ்பாரதி, ஏற்கனவே தனது பிறந்த நாளை வாளால் கேக் வெட்டி கொண்டாடி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஆவார்.

Related Stories:

>