×

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தேவையான தடுப்பூசி, மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யவேண்டும்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தேவையான தடுப்பூசிகளையும், சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரியையும் பூஜ்ய சதவிகிதமாக நிர்ணயிக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதம்: கோவிட் தொற்றால் அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொற்றை கட்டுப்படுத்த தேவையான தடுப்பூசிகளையும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளையும் மாநில அரசுகள் கொள்முதல் செய்து வருகின்றன. இதனை கருத்தில்கொண்டு, ஜி.எஸ்.டி. கவுன்சிலோடு கலந்தாலோசித்து, இந்த பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறிப்பிட்ட காலத்திற்கு பூஜ்ய சதவிகிதம் என நிர்ணயிக்க வேண்டும்.
 
பொருளாதார வளர்ச்சி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மாநில அரசுகளின் வரி வருவாய் வளர்ச்சி பெருமளவில் குறைந்துள்ளதால், அதனை ஈடுசெய்ய கீழ்க்குறிப்பிட்டுள்ள மூன்று நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு மாநில அரசுகளுக்கு உதவ வேண்டும்.

1. நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகைகளையும், மாநில நுகர்பொருள் கழகங்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ள அரிசி மானிய தொகையையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.  
2. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூடுதல் மேல்வரி விதிப்பால் மத்திய அரசுக்கு கிடைத்துள்ள வருவாய் மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படாத நிலையில், கொரோனா தொற்றால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பீட்டை ஈடுசெய்ய சிறப்பு நிதி உதவி அளிக்கப்பட வேண்டும்.  
3. இந்த காலத்தில் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினங்களை மேற்கொள்ள தேவைப்படும் நிதியை திரட்டுவதற்காக, அனுமதிக்கப்பட்டுள்ள கடன் வாங்கும் அளவை, மாநிலத்தின் உற்பத்தி மதிப்பில் மூன்று சதவிகிதம் என்ற அளவில் இருந்து மேலும் ஒரு சதவிகிதம் உயர்த்த வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,MK Stalin , Chief Minister MK Stalin's letter to the Prime Minister to abolish GST on vaccines and drugs required to control corona infection
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...