ரம்ஜான் பண்டிகை; தலைவர்கள் வாழ்த்து

சென்னை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ரமலான் புனித மாதம் விடைபெற்று செல்லும் வேளையில், கொரோனா எனும் கொடிய நோயின் பிடியில் இருந்தும், அச்சத்தில் இருந்தும், உலக மக்கள் விடுதலை பெறவும், நலமாகவும், மன நிறைவுடனும் வாழ்ந்திடவும் இதயமாற வேண்டி, இனிய ஈத் பெருமான் ஈகை திருநாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்: புனித நாளில் உலகெங்கும் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் வளமும், மகிழ்வும் பெருகிடஎல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை உளமாற தெரிவித்துக் கொள்கிறேன்.அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி: கொரோனா பெருந்தொற்றால் நம்மை சுற்றி வாழுகின்ற மக்கள் பலரும் அல்லல்பட்டு வரும் இந்த வேளையில் நம்முடைய அன்பும், ஈகையும் அவர்களுக்கு தாராளமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். எங்களது இதயம் கனிந்த ரம்ஜான் பெருநாள் நல்வாழ்த்துகளை உரிதாக்கிக்கொள்கிறோம்.

ஜி.கே.வாசன் (தமாகா): நோன்பு இருந்து இறைவனை வழிபட்டு அகத்தையும், புறத்தையும் தூய்மைப்படுத்திக்கொள்ளும் விதமாக கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்றால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் ரம்ஜான் பண்டிகையை அனைவரும் அவரவர் இல்லங்களில் பாதுகாப்போடு இறைவனை வழிபட்டு உலக மக்களின் நலனுக்காக வேண்டி கொள்வோம். பாமக நிறுவனர் ராமதாஸ்:  உலகம் முழுவதும்  வாழும் மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருக ஈகைத் திருநாள் நன்நாளில் அனைவரும் உறுதியேற்போம்.பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி: ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ரமலான் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லா: கொரோனாவால்  உலகமே நிலைகுலைந்து போயுள்ள சூழலில், இஸ்லாம் வலியுறுத்தும் ஈகையென்னும்  அருட்குணம் முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மனிதக் குலத்திற்கும்  உதவியிருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.சமக தலைவர் சரத்குமார்: நபிகள் நாயகம் போதித்த அறங்களையும், வாழ்வில் நேர்மையையும் கடைபிடித்து வீட்டிற்கும், சமூகத்திற்கும் பயனுள்ளவர்களாக உருவெடுப்போம். இந்த இனிய நன்னாளில் உலகெங்கும் வாழும் இஸ்லாமிய சொந்தங்களுக்கு இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள். வேல்முருகன், (தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி):ரமலான் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களின் வாழ்வில் அன்பும், அரவணைப்பும், அறமும் பெருக வேண்டும், வளம் கொழிக்க வேண்டும், வாழ்வு செழிக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

முனிருத்தீன் ஷெரீப், (தலைவர், இந்திய தேசிய லீக்):இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து அனைத்து தரப்பு மக்களையும் காக்க ரமலான் பெருநாளில் இறைவனிடம் பிரார்த்திப்போம். அதேபோல், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், தேசியவாத காங்கிரஸ் கட்சி துணை தலைவர் கோல்டன் அபுபக்கர், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் தலைவர் தேவநாதன் யாதவ், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடன்ட் அபுபக்கர் ஆகியோர் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>