கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு திட்டம்: -கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி வழங்க முடிவு

சென்னை: கொரோனா நிவாரண பொருட்களாக கோதுமை மாவு, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட 13 மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி சுமார் 2 கோடி குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக வெற்றிபெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். பதவியேற்றவுடன் கொரோனா நிவாரண தொகையாக ரூ.4 ஆயிரம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுதவிர, ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, மாநகர பஸ்களில் பெண்கள் இலவச பயணம் என 5 அறிவிப்புகளை வெளியிட்டார். இது தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், வருகிற ஜூன் 3ம் தேதி மறைந்த திமுக தலைவர் கலைஞரின் பிறந்த நாள் ஆகும். இதையொட்டி தமிழகத்தில் 2 கோடியே 11 லட்சத்து 12 ஆயிரத்து 798 குடும்ப அட்டைதாரர்களுக்கும் 13 வகையான மளிகை பொருட்களை கொரோனா நிவாரண பொருளாக வழங்க தமிழக அரசு வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக  தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இதற்காக டெண்டர் கோருபவர்கள் வருகிற 19ம் தேதி 11 மணி வரை தாக்கல் செய்யலாம் என்றும், 19ம் தேதி காலை 11.30 மணிக்கு டெண்டர் திறக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. டெண்டர் கோருபவர்கள் ரூ.3.60 கோடி டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி, கோதுமை மாவு 1 கிலோ, உப்பு 1 கிலோ, ரவா 1 கிலோ, சர்க்கரை 500 கிராம், உ.பருப்பு 500 கிராம், புளி 250 கிராம், க.பருப்பு 250 கிராம், கடுகு 100 கிராம், சீரகம் 100 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், குளியல் சோப்பு ஒன்று, சலவை சோப்பு ஒன்று என 13 பொருட்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொதுமக்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

>