×

எரியூட்டுவதற்கான கட்டணம் அதிகரிப்பு எதிரொலி: ஆற்றில் சடலங்களை வீசுவதால் நீர் மூலம் கொரோனா பரவுமா?.. உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் மக்கள் பீதி

வாரணாசி: சடலங்களை எரியூட்டுவதற்கான கட்டணம் அதிகரித்ததால், கங்கையில் சடலங்களை மக்கள் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால், நீர் மூலம் கொரோனா பரவுமா? என்ற அச்சம் உத்தரபிரதேசம், பீகார் மக்களிடையே எழுந்துள்ளது.  உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் பாயும் கங்கை ஆற்று பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் 45 உடல்கள் மிதந்தன. நேற்று முன்தினம் பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தின் கங்கை ஆற்றில் மிதந்து வந்த 71 உடல்கள் மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. கடந்த 10தேதி, இமாசலபிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள யமுனை ஆற்றில் மிதந்த 5 உடல்கள் மீட்கப்பட்டன.

வடமாநிலங்களில் கொரோனா பலிகள் அதிகரித்து வருவதால், நதிகளில் வரும் சடலங்கள் கொரோனாவால் பலியானோரின் உடல்களாக இருக்குமோ? என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது. இதுகுறித்து கான்பூர் ஐ.ஐ.டி சுற்றுச்சூழல் பேராசிரியர் சதீஷ் டாரே கூறுகையில், ‘கங்கை ஆற்றிலும், அதன் துணை ஆறுகளிலும் உடல்களை கடந்த காலம் தொட்டே வீசிவிட்டு செல்கின்றனர். ஆனால், கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் இத்தகைய நிகழ்வுகள் குறைந்துள்ளன. தற்போது, கொரோனா காலத்தில் கங்கை ஆற்றில் உடல்களை போடுவது தீவிரமான பிரச்னையாக மாறியுள்ளது. ஆனால், தண்ணீர் மூலம் கொரோனா பரவ வாய்ப்பில்லை.

ஒருவேளை அவை கொரோனா நோயாளிகளின் உடல்களாக இருந்தாலும், நீரோட்டத்தில் அடித்து வரப்படும்போது கிருமிகள் நீர்த்துப் போய்விடும். குறிப்பிடத்தக்க அளவுக்கு பாதிப்பு இருக்காது. எனவே, இதுபற்றி கவலைப்பட வேண்டாம்’ என்றார். இந்நிலையில், கங்கையில் தற்போது சடலங்கள் அதிகளவில் வீசப்பட்டு வருவது குறித்து, வாரணாசியில் உள்ள மகாராஷ்டிரரான மணிகர்னிகா மர வியாபாரி கிஷன் குமார் கூறுகையில், ‘கடந்த பத்து நாட்களுக்கு முன்பிருந்தே கங்கையில் சடலங்கள் அதிகளவில் வருகின்றன. துர்மரணம், விஷ கடிகளில் மரணம் அடைபவர்களை கங்கையில் சிலர் வீசிவிடுகின்றனர்.

கொரோனா சடலத்தை எரியூட்ட 7 ​​ஆயிரம் ரூபாயும், கொரோனா அல்லாத சடலங்களை எரியூட்ட 5,000 ரூபாயாயும் வசூலிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. ஆனால், சடலத்தை எரிப்பதற்காக மரக்கட்டை விலை உயர்ந்துள்ளதால், 400 ரூபாய் கூடுதலாக விற்கின்றோம். பண வசதி இல்லாதவர்களுக்கு இலசவமாக கூட தகனம் செய்ய சில அமைப்புகள் உள்ளன. தகனம் செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்களிடம் வதந்தி பரவியதால், பலர் சடலங்களை கங்கையில் வீசிவிட்டு செல்கின்றனர். கடந்த மாதம் 100 முதல் 150 இறந்த உடல்கள் வந்தன.

இப்போது 25 முதல் 30 இறந்த உடல்கள் மட்டுமே வருகின்றன. தற்போது, பீகார், உத்தரபிரதேச மாநில அதிகாரிகள் ஒருங்கிணைந்து கங்கையில் சடலம் வீசிவிட்டு செல்வோரை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்’ என்றார்.


Tags : Uttar Pradesh ,Bihar , Echoes of fuel tariff hike: Will corona spread by water due to dumping of corpses in river? .. People panic in Uttar Pradesh, Bihar
× RELATED உ.பி.யில் திருமண ஊர்வலத்திற்காக காரை...