இ.கம்யூ. பொதுச் செயலாளர் டி.ராஜா சகோதரர் சுவாச பிரச்னையால் மரணம்: முத்தரசன் இரங்கல்

சென்னை:  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய  பொதுச் செயலாளர் டி.ராஜாவின் சகோதரர் மறைவுக்கு முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் டி.ராஜாவின் இளைய சகோதரரும், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலருமான டி.கருணாகரன் (65) நேற்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். .கருணாகரன் கிராம நிர்வாக அலுவலராக பல கிராமங்களில் பணிபுரிந்து, இறுதியாக திருவண்ணாமலை மாவட்டம் பேரணாம்பட்டு கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

பின்னர் குடும்பத்தோடு குடியாத்தத்தில் வசித்து வந்தார். இரண்டொரு நாட்களுக்கு  முன்னர் சுவாசப் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனை செய்ததில் இவருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் மூச்சுத்திணறல் பிரச்சனைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்தார் என்பது வேதனையளிக்கிறது. அண்மையில் தான் மூத்த சகோதரரையும், சகோதரி ஒருவரையும் இழந்துள்ள டி.ராஜாவிற்கும், அவர்களது குடும்பத்திற்கும் மேலும் ஒரு இழப்பு என்பது ஆற்றுப்படுத்த முடியாத துயரமாகும்.

அன்னாரின் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த அஞ்சலி தெரிவிப்பதுடன், டி.ராஜா உள்ளிட்ட சகோதர்களின் துயரில் பங்கேற்று, அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>