×

மதுரை தத்தனேரி, கீரைத்துறை மின் மயானங்களில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதில் 5 மணிநேர காத்திருப்பு

மதுரை: கொரோனாவால் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய மதுரையில் உள்ள தத்தனேரி, கீரைத்துறை மின் மயானங்களில் குறைந்தது 5 மணிநேரத்திற்கு உறவினர்கள் காத்திருந்து அவதியடைகின்றனர். கொரோனா 2ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. பரவலை தடுக்கும் வகையில், வரும் 24ம் தேதி வரை இரு வாரங்களுக்கு அரசு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதேபோல், கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மதுரையில் கொரோனாவால் ஒன்று, இரண்டு என இருந்த இறப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக 16 பேர் வரை உயர்ந்துள்ளது. இதுதவிர பலதரப்பட்ட நோய்களாலும், விபத்து, தற்கொலை என பல்வேறு நிலைகளிலும் இறப்பவர்களின் பட்டியல் தினமும் 50 பேர் வரை இருக்கிறது. கொரோனாவால் இறப்பவர்களின் உடல், நோய் தொற்று பரவாமல் இருப்பதற்காக உரிய வழிகாட்டுதல்படி, தகனம் செய்யப்படுகிறது. மதுரையில் தத்தனேரி, கீரைத்துறை ஆகிய இடங்களில் உள்ள மின் மயானங்களுக்கு மட்டும் தினமும், மதுரை, அருகாமை மாவட்டங்களில் இருந்து தலா 20க்கும் அதிக உடல்கள் எரியூட்டுவதற்காக கொண்டு வரப்படுகின்றன.

ஒரு மணிநேரத்திற்கு ஒரு உடல் எரியூட்ட முடியும் என்பதால், உறவினர்கள் குறைந்தது 4 முதல் 5 மணிநேரம் வரையிலும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மதுரை கீரைத்துறை மின் மயானத்திற்கு உடலை தகனம் செய்ய வந்திருந்த உறவினர் கணேசன் கூறும்போது, ‘‘கொரோனாவால் பலியானவரின் உடலை தகனம் செய்ய குறைந்தது 5 மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. உடல்களுடன் உறவினர்கள் காத்திருப்பது வேதனையானது.

கொரோனா பாதித்த உடல்களை அப்படியே போட்டு வைத்திருப்பதும் ஆபத்தானது. ஒரே நேரத்தில் பல உடல்களை எரியூட்டும் வகையில் மின்மயானத்தில் வசதிகளை மாநகராட்சி மேம்படுத்த வேண்டும். மேலும் மதுரையில் கூடுதல் இடங்களிலும் சிறப்பு நடவடிக்கை மூலம் மின் மயானங்கள் ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

Tags : Madurai Thattaneri ,Keeraithurai Electric Cemeteries , 5 hour wait for coronation of corona victims at Madurai Thattaneri, Keeraithurai Electric Cemeteries
× RELATED மதுரை தத்தனேரி, கீரைத்துறை மின்...