×

மருத்துவ ரீதியான காரணங்கள் எதுவும் இல்லாத பயங்கரம் தமிழகத்தில் இளைஞர்களை தாக்கும் கொரோனா: இணைநோய் இல்லாதவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்

சென்னை: தமிழகத்தில் தற்போது நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட எந்த இணை நோய்களும் இல்லாத இளைஞர்களையும் கொரோனா தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கொரோனா நோயின் 2வது அலை நாடு முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வட மாநிலங்களில் தினமும் கொத்துக்கொத்தாக மக்கள் கொரோனாவுக்கு பலியாகி வருகிறார்கள். போதுமான மருத்துவ கட்டமைப்புகள்  இல்லாமல் குஜராத், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. தினமும் சுமார் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது. தமிழகத்தில் போதுமான மருத்துவ கட்டமைப்புகளும், வசதிகளும், ஆராய்ச்சி மையங்களும்  இருந்தாலும் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. ஆரம்பகட்டத்தில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள வயது முதிர்ந்தவர்களையே குறிவைத்த கொரோனா தற்போது இளைஞர்களை அதிக அளவில் தாக்கும் நிலை உருவாகியுள்ளது. எந்த இணை நோயும் இல்லாத பல இளைஞர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். 40 வயதுக்கு உட்பட்ட பலர் சமீப நாட்களில் அதிக எண்ணிக்கையில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்களும்  வெளிவந்துள்ளன.

 கடந்த ஜனவரி 10ம் தேதி கணக்கீட்டின்படி கொரோனா தொற்றுக்கு பலியான 12,222 பேரில் 18 சதவீதம் பேர் அதாவது 2,084 பேர் எந்த அறிகுறியும் இல்லாத, வேறு நோய்கள் எதுவும் இல்லாதவர்கள் கொரோனாவுக்கு  பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மே 9ம் தேதி 6063 ஆக அதிகரித்துள்ளது. மொத்த உயிரிழப்பான 15,648ல் இது 39 சதவீதமாகும். நீரிழிவு நோய் போன்ற நோய்கள் உள்ளவர்களில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் கொரோனாவுக்கு  அதிகம் பலியாகினர். கடந்த நான்கைந்து வாரங்களில் இளம் வயதினர் கொரோனாவுக்கு பலியாவது அதிகரித்து வந்துள்ளது என்று கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் வசந்தமணி தெரிவித்துள்ளார். நேற்று பலியான 298  பேரில் 5 பேர் 20 வயதுக்கு உட்பட்டவர்கள்.

மேலும், 30 வயதுள்ளவர்களும் பலியாகியுள்ளனர். இவர்களில் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உள்ளவர்கள் அடங்குவர். அதே நேரத்தில் கொரோனாவுக்கு பலியான 40 வயதுள்ள 48 பேரில்  21 பேர் எந்த இணை நோயும் இல்லாதவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் மே வரையிலான காலக்கட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களில் 37 சதவீதம்பேர் 31 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். ஜனவரி 10ம் தேதி  456 பேரும், ேம 9ம் தேதி 623 பேரும் 31 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள்.

இருபதிலிருந்து 30 வயதுக்கு உட்பட்டவர்களின் பலி எண்ணிக்கை 142 லிருந்து 187 ஆக உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்பான 15,648 பேரில் 20 வயதுடையவர்கள் 8  பேரும், 30 வயதுடையவர்கள் 35 பேரும் அடங்குவர். இது குறித்து ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் தேரணிராஜன் கூறும்போது, கொரோனா தொற்று தெரிந்தவுடன் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கையை வெகுவாக குறைத்துள்ளோம் என்றார்.

மிடில் ஏஜ் இறப்பு அதிகரிப்பு

ஜனவரி 10ம் தேதி 10 வயதுடையவர்கள் 12 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மே 9வரை இந்த எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. ஜனவரி 10ம் தேதி 11 முதல் 20 வயதுடையவர்கள் 23 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மே 9ம்  தேதி 25 ஆக உயர்ந்துள்ளது. ஜனவவி 10ம் தேதி 21 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் 142 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மே 9ம் தேதி 187 ஆக அதிகரித்துள்ளது. ஜனவரி 10ம் ேததி 31 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் 456  பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மே 9ம் தேதி 623 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி பார்த்தால் ஜனவரி 10 லிருந்து 36 சதவீதம் அதிகம் பேர் இந்த வயதுக்குட்பட்டவர் இறந்துள்ளனர்.

திடகாத்திரமான  இளைஞர்கள் பலி ஏன்?

மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சை  பிரிவுகளில் வயதானவர்களுடன் 40 வயதுக்கு உட்பட்டவர்களும் அதிகம்  அனுமதிக்கப்பட வேண்டிய நிலை உள்ளதால் நல்ல ஆரோக்கியமாக உள்ளவர்களும்  பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.  சமீப காலமாக இளம் வயதினரை கொரோனா அதிகம் ஏன்  தாக்குகிறது என்பது தொடர்பான எந்த அறிவியல் ரீதியான ஆய்வும் இல்லை.  பெரும்பாலும் கொரோனா தாக்கம் சமூக, பொருளாதாரத்தில் நல்ல வசதியுள்ள  இளஞர்களையே  தாக்குவதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான  காரணம் என்ன என்பது மருத்துவ ரீதியாக ஆய்வு செய்யப்படவில்லை என்றும்  அவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா நோய் எல்லா வயதினரையும் பாதிக்கும்  என்பதை அறிந்து இளைஞர்கள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்று  மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : Corona ,Tamil Nadu , Terror with no medical cause Corona attacking youth in Tamil Nadu: Those without co-morbidities are also affected
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...