டெல்லி: சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதால் இந்தியர்கள் சாய்னா, ஸ்ரீகாந்த் ஆகியோரின் ஒலிம்பிக் வாய்ப்பு கேள்வி குறியாகி உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் பங்கேற்க இந்தியர்கள் பி.வி.சிந்து, சாய் பிரனீத், சிராக் ஷெட்டி, ரங்கி ரெட்டி ஆகியோர் தகுதிப் பெற்றுள்ளனர். ஆனால் சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் இன்னும் தகுதிப் பெறவில்லை. மலேசியா ஓபன், சிங்கப்பூர் ஓபன் போட்டிகள் அவர்களுக்கு கடைசி வாய்ப்பாக இருந்தன. கொரோனா பீதி காரணமாக இந்தியர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மலேசிய ஓபன் தள்ளி வைக்கப்பட்டது.
அதனால் ஜூன் முதல் வாரத்தில் நடைபெற இருந்த சிங்கப்பூர் ஓபனை சாய்னா, ஸ்ரீகாந்த் இருவரும் நம்பியிருந்தனர். அங்கு 21 நாட்கள் குவாரன்டைன் என்பதால் சாய் பிரனீத் விலகிவிட்டார். ஆனால் சாய்னா, ஸ்ரீகாந்த் இருவரும் சிங்கப்பூர் ஓபனில் பங்கேற்க தயாராக இருந்தனர். இந்நிலையில் சிங்கப்பூர் ஓபன் தள்ளி வைக்கப்படுவதாக உலக பேட்மின்டன் கூட்டமைப்பு நேற்று அறிவித்துள்ளது. மலேசியா ஓபன் நடத்திய பிறகு சிங்கப்பூர் ஓபன் நடைபெறும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஜூலை 23ம் தேதி ஒலிம்பிக் ெதாடங்க உள்ள நிலையில் சிங்கப்பூர் ஓபன் மீண்டும் நடைபெறுவதற்கான வாய்ப்பும் காலமும் குறைவாக உள்ளது. அதனால் சாய்னா, ஸ்ரீகாந்த் இருவரின் ஒலிம்பிக் வாய்ப்பு இப்போது கேள்வி குறியாகி உள்ளது.