×

திருவனந்தபுரத்தில் கனமழை: ரயில் நிலையத்தில் வெள்ளம் புகுந்தது..! பயணிகள் கடும் அவதி

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் நேற்று பெய்த கனமழையால் ரயில் நிலையத்தில் வெள்ளம் புகுந்ததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். தென்கிழக்கு அரபிக்கடலில் வரும் 14ம் தேதி காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பிருக்கிறது. ஆகவே இன்று முதல் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது. லட்சத்தீவுக்கு அருகே வடமேற்கு திசையில் இந்த தாழ்வு மண்டலம் பயணம் செய்து 16ம் தேதிக்குள் புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் புயல் அடிக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும் பல்வேறு பகுதிகளில் கடல் கொந்தளிப்பு ஏற்படும். எனவே வரும் 14ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று கேரள பேரிடர் நிவாரண அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் கடந்த சில தினங்களாக தினமும் மதியத்துக்கு பின்னர் மழை பெய்து வருகிறது. நேற்றும் மதியத்துக்கு பின்னர் மழை பெய்தது. இது இரவு 7 மணிக்கு பின்னர் கனமழையாக உருவெடுத்தது. பல மணிநேரம் தீவிரமாக பெய்த கனமழையால் திருவனந்தபுரம் கிழக்கே கோட்டை, தம்பானூர், ஜெகதி உட்பட தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. திருவனந்தபுரம் ரயில் நிலையத்துக்குள் வெள்ளம் புகுந்ததால் 1, 2 நடைமேடைகள் முழுவதும் நீரால் சூழ்ந்தது. இந்த சமயத்தில் கோழிக்கோட்டில் இருந்து ரயிலில் வந்த பயணிகள் வெளியேற முடியாமல் தவித்தனர். பயணிகளை அழைத்து செல்ல வந்த வாகனங்களும் ரயில் நிலையம் வர முடியாமல் திணறின. டிக்கெட் கவுன்டர் பகுதியிலும் வெள்ளம் புகுந்தது. மேலும் அப்பகுதி கடைகள் மற்றும் வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.

Tags : Thiruvananthapuram , Heavy rains in Thiruvananthapuram: Railway station flooded ..! Passengers suffer severely
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!