×

சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்க தாமதம் ஏற்படுவதால் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் நிலை

சென்னை: சென்னையில் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்க தாமதம் ஏற்படுவதால் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் நிலை காணப்படுகிறது. ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உட்பட சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 4,368 படுக்கைகள் உள்ளன. இவற்றில் 90 சதவீத படுக்கைகள் நிரம்பிவிட்டன.

இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு உடனடியாக படுக்கை வசதி கிடைக்காமல் ஆம்புலன்ஸிலேயே பல மணி நேரம் காத்திருக்கக்கூடிய சூழல் நிலவுகிறது. சென்னையில் மொத்தமாக 2,000 ஆக்சிஜன் படுக்கைகள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்தும் நிரம்பிவிட்டதால் குறைந்தபட்சம் 4 மணி நேரம் வரை நோயாளிகள் காத்திருக்கிறார்கள்.

அதேபோல திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு நோயாளிகளை அழைத்து வருகின்றனர். நேற்று முதல் கூடுதலாக 400 படுக்கைகள் நந்தம்பாக்கம் மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் நோயாளிகளை அங்கு மாற்றும் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகள் அதிகரிப்பை அடுத்த 10 நாட்களில் 3,000 படுக்கைகளை உருவாக்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு காரணமாக பதிவு செய்த 6 நாட்களுக்கு பின் மருந்து வழங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் கொரோனா நோயாளிகளை காப்பாற்ற உதவும் ரெம்டெசிவிர் மருந்துகள் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரே இடத்தில் மக்கள் குவிவதை தடுக்கும் வகையில் கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக்கல்லுரிகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கப்பட்டாலும் சென்னையில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. முன்பு நாளொன்றுக்கு 500 பேருக்கு வழங்கப்பட்ட ரெம்டெசிவிர் மருந்து தற்போது 250 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை நாளொன்றுக்கு 7,000 குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்தையே ஒதுக்கீடு செய்துள்ளனர். தமிழகத்திற்கு நாளொன்றுக்கு 20,000 குப்பிகள் தேவைப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 10ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார். இதுவரை மத்திய அரசு ரெம்டெசிவரை கூடுதலாக வழங்கவில்லை.

மருந்து தட்டுப்பாடு நிலவி வருவதால் இன்று பதிவு செய்தவர்களுக்கு 6 நாட்களுக்கு பிறகு தான் மருந்து கிடைக்கும் என்று விற்பனை மையத்தில் கூறப்பட்டுள்ளது.



Tags : Chennai , corona
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...