×

ஏடிபி தரவரிசை: 2ம் இடத்தில் டேனில் மெட்வடேவ்

ரோம்: ஏடிபி தரவரிசையில் ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ், ஸ்பெயின் நட்சத்திரம் ரஃபேல் நடாலை பின்னுக்கு தள்ளி, 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ரஷ்யாவின் இளம் வீரர் டேனில் மெட்வடேவ் (25), இந்த ஆண்டு சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார். நடப்பு ஆண்டில் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இதுவரை 22 போட்டிகளில் ஆடி, அவற்றில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். தவிர ஒரு ஏடிபி கோப்பையையும் கைப்பற்றியுள்ள அவர், இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரன்னர் கோப்பையும் வென்றுள்ளார். ஏடிபி தரவரிசையில் 3ம் இடத்தில் இருந்த மெட்வடேவ், தற்போது இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் ஆடி வருகிறார். கடந்த வாரம் முடிந்த மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஏடிபி தரவரிசையில் இருந்த ரஃபேல் நடால் பைனலுக்கு தகுதி பெறவில்லை. இதையடுத்து அவர் தரவரிசையில் 9630 புள்ளிகளுடன் 3ம் இடத்திற்கு இறங்கியுள்ளார். 9,780 புள்ளிகளுடன் மெட்வடேவ், 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஏடிபி தரவரிசையில் முதல் இடத்தில் செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச்சும் (11,463 புள்ளிகள்), 4ம் இடத்தில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமும் (8,365) உள்ளனர். 5ம் இடத்தில் கிரீஸ் வீரர் ஸ்டெபனாஸ் சிட்சிபாசும் (7,610 புள்ளிகள்), 6ம் இடத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரெவும் (6,945 புள்ளிகள்) உள்ளனர். இவர்கள் அனைவருமே இம்மாதம் துவங்கவுள்ள பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் சிறப்பாக ஆட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்களில் டேனில் மெட்வடேவும், அலெக்சாண்டர் ஸ்வரெவும் பிரெஞ்ச் ஓபனில் சாதிக்கும் கனவோடு உள்ளனர். தரவரிசையில் 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது குறித்து மெட்வடேவ் கூறுகையில், ‘‘இப்போது என்னுடைய கவனம் இதில் இல்லை. ஜனவரியில் இருந்தே நடாலும், நானும் 2ம் இடத்தை மாறி மாறி பிடித்துக் கொண்டிருக்கிறோம். இப்போது இத்தாலியன் ஓபனில் ஆடிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு போட்டியையும் நான் பிரெஞ்ச் ஓபனுக்கான பயிற்சி போட்டியாக நினைத்து ஆடிக் கொண்டிருக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

Tags : ATP ,Daniel Medvedev , ATP Rankings: Daniel Medvedev in 2nd place
× RELATED பெங்களூரு ஓபன் சுமித் நாகல் ஏமாற்றம்