×

குறிச்சி மலையில் கொள்ளை போகும் இயற்கை வளங்கள்-விசாரணைக்கு மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு

பவானி :  பவானியை அடுத்த குறிச்சி மலைப்பகுதியில் சட்டவிரோதமாக கொள்ளை போகும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கக் கோரி அளிக்கப்பட்ட மனுமீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், குறிச்சி உள்வட்டம், குறிச்சி, கல்பாவி மற்றும் ஒலகடம் கிராமப் பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் குறிச்சிமலை உள்ளது. இயற்கை எழில் நிறைந்த மலையான இங்கு, வனத்துறை சார்பில் சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் ஏராளமான மரங்கள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மலைப்பகுதியில் நூற்றுக்கணக்கான மான், முயல், மயில், உடும்பு மற்றும் கீரி உள்ளிட்ட வன விலங்குகளும், ஏராளமான பறவைகளும் வசித்து வருகின்றன.

இந்த மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் சார்பில் நிபந்தனை அடிப்படையில் நிலம் வழங்கப்பட்டுள்ளது. நிபந்தனை அடிப்படையில் நிலங்களை ெபற்றவர்கள் அவர்களின் வாரிசுகள் அரசு விதித்துள்ள நிபந்தனைகளை மீறி தனி நபர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கிய நிலங்களை தாழ்த்தப்பட்டவர் அல்லாத பிற சாதியினருக்கும் விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது குறிச்சிமலை மற்றும் மலையை ஒட்டியுள்ள பகுதிகளில்  கனிம வளங்கள், மண் மற்றும் வெள்ளை கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனை வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜேசிபி இயந்திரங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்துள்ளனர்.

நிலத்தினை இங்கு வாங்கியோர் அரசு சொந்தமான புறம்போக்கு நிலத்தினையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும், நிலத்திலுள்ள உயிருள்ள பச்சை மரங்களை வெட்டி விற்பனை செய்துள்ளனர். எனவே, குறிச்சி மலையை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். தற்போது வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குறிச்சி மலையை வனத்துறையின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்து வனப்பகுதியில் வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும்.

குறிச்சிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிபந்தனைகளை மீறி விற்பனை செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். நிபந்தனைகளை மீறி அம்மாபேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த அனைத்து ஆவணங்களையும் ரத்து செய்ய வேண்டும். குறிச்சிமலை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயற்கை கனிம வளங்களை பாதுகாக்க உத்தரவிடவேண்டும். முறைகேடாக விற்பனை செய்த நிலங்களை மீட்டு, மீண்டும் அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்.  

அரசின் சார்பில் வழங்கப்பட்ட நிபந்தனை பட்டா பெற்ற நிலத்தின் உரிமையாளர்கள் இறந்துவிட்ட நிலையில், இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்களின் வாரிசுகள் என போலியான ஆவணங்களை தயார் செய்து ஆள்மாறாட்டம் செய்து அம்மாபேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண பதிவு செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.  

இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.பழனிச்சாமி மனு அளித்திருந்தார். இதன்பேரில், உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரத்தை மனுதாரருக்கும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கும் தெரிவிக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, கோபி கோட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : District Administration , Bhavani: Bhavani next petition on protection of illegally plundered natural resources in Kurichi Hills
× RELATED ஊட்டி மகளிர் தின விழாவில் நடனமாடிய கலெக்டர், டிஆர்ஓ