சென்னை கொரோனா பாதுகாப்பு மையங்கள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  உள்ள கொரோனா பாதுகாப்பு மையங்கள் படிப்படியாக  கொரோனா சிகிச்சை ஆரம்பநிலை சுகாதார மையமாக மாற்றப்பட உள்ளது என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை  கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங்  தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும்  கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு  நடவடிக்கைகள் குறித்து மண்டல கள ஒருங்கிணைப்பு குழு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் தலைமையிலும், சிறப்பு  ஒருங்கிணைப்பு அலுவலர்/வணிக வரித்துறை முதன்மைச் செயலாளர் சித்திக் மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலையிலும் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கொரோனா பாதுகாப்பு மற்றும் சிகிச்சை குறித்து புதிய நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.  15 மண்டலங்களுக்கும் களப்பணிகளை ஒருங்கிணைக்க இந்திய ஆட்சிப்பணி அளவிலான அதிகாரிகள் தலைமையில்  மாவட்ட வருவாய் அலுவலர், காவல்துறை அலுவலர் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.  இக்குழுவானது, மண்டல அலுவலர்கள், மண்டல நல அலுவலர்கள் மற்றும் இதர மாநகராட்சி  அலுவலர்களுடன்  ஒருங்கிணைந்து புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதன்படி, ஒவ்வொரு மண்டலத்திலும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு சோதனை முடிவு வருவதற்கு  முன்பாகவே சம்பந்தப்பட்ட நபருக்கு ஜிங்க், விட்டமின் மாத்திரைகள், கபசுரக் குடிநீர் மற்றும் மூன்றடுக்கு முகக்கவசங்கள் அடங்கிய மருத்துவ தொகுப்பு வழங்கப்படும்.  

கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள சென்னையில் 59 ஆய்வகங்கள் உள்ளன.  பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களுக்கான முடிவுகள் இதுநாள்வரை சம்பந்தப்பட்ட ஆய்வகங்களின் மூலம் நேரடியாக வழங்கப்பட்டு வந்தது.   பரிசோதனை முடிவுகள் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் இனிவரும் காலங்களில் அனைத்து ஆய்வகங்களும் தொற்று பரிசோதனை மேற்கொண்ட நபர்களின் முடிவுகளை சென்னை மாநகராட்சி  பொதுசுகாதாரத்துறையிடம் வழங்க வேண்டும்.  இந்தப் பரிசோதனை முடிவுகளை பெற ஒவ்வொரு மண்டலத்திற்கும் பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு   சம்பந்தப்பட்ட மாநகராட்சி மருத்துவக் குழுவின் வாயிலாக மட்டுமே பரிசோதனை  முடிவுகள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.  

பரிசோதனை முடிவுகள் பெறப்பட்டு தொற்று பாதித்த நபர்களின் வயது, உடல் சார்ந்த இணை நோய்கள், சுவாசத்தில் ஆக்ஸிஜன் அளவு போன்ற பல்வேறு முதற்கட்ட சோதனைகளை மருத்துவர்களின் மேற்பார்வையில் மாநகராட்சி சுகாதாரக்  குழுவானது அவர்களின் வீடுகளுக்கே சென்று பரிசோதித்து தொற்று பாதிப்பு குறைந்த அளவே இருப்பின் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்.  எக்ஸ்ரே, இரத்தப் பரிசோதனை உட்பட முதற்கட்ட பரிசோதனை  மேற்கொள்ள வேண்டிய நபர்களை  மாநகராட்சி முதற்கட்ட உடல்நிலை பரிசோதனை மையத்திற்கு அழைத்து சென்று தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு மருத்துவர்களின் ஆலோசனையின்படி,  அவர்களை வீடுகளிலேயே  தனிமைப்படுத்துதல் அல்லது கொரோனா பாதுகாப்பு மையத்தில் தனிமைப்படுத்துதல் அல்லது மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளித்தல் என உடனடியாக வகைப்படுத்தி  சிகிச்சை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சென்னை மாநகராட்சி தலைமையிடத்தில் ஏற்கனவே 100 தொலைபேசி இணைப்புகளுடன்  கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது.

மேலும், 15 மண்டலங்களிலும் தொற்று பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட மனநல  ஆலோசனைகள் வழங்க ஒரு மண்டலத்திற்கு 6 நபர்கள் என சுழற்சி முறையில் பணியில் ஈடுபட 15 மண்டலங்களுக்கும் மருத்துவம் முடித்த பயிற்சி மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையில் உடனடியாக நியமிக்க வேண்டும்.  

அவர்கள் தங்கள் மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் நோய் தொற்று பாதித்த நபர்களுக்கு காலை, மாலை என நாள்தோறும் இரண்டு முறை தொலைபேசியில் அழைத்து மருத்துவ ஆலோசனைகளை வழங்க வேண்டும். இது தொடர்பான  விவரங்களை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

தற்பொழுது கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை அதிகரித்துள்ளதால், அனைத்து கொரோனா பாதுகாப்பு மையங்களும் படிப்படியாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய  கொரோனா சிகிச்சை ஆரம்ப நிலை சுகாதார மையமாக மாற்றவும், அங்கு சிகிச்சைகளை கண்காணிக்க போதிய அளவு எண்ணிக்கையிலான மருத்துவ அலுவலர்களையும் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  மேற்குறிப்பிட்ட புதிய  நடைமுறைகளை இன்று முதல் அனைத்து மண்டலங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Related Stories:

>