அனுமதியில்லாத கட்டிடங்கள் கட்டுமான விவகாரம்: சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தன நடவடிக்கையே காரணம்: நோட்டீஸ் அனுப்புவதுடன் கடமை முடிந்துவிடாது : ஐகோர்ட் கண்டனம்

சென்னை:  அனுமதியில்லா கட்டிடங்களுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பிவிட்டு கடமை முடிந்துவிட்டதாக எந்த மேல் நடவடிக்கையும் எடுக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் செயல்படுகிறார்கள் என்று சென்னை உயர்  நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.  சென்னை நெற்குன்றம் பகுதியில் ரூபஸ், ஆல்பர்ட் ஆகியோர் சென்னை பெருநகர வளர்ச்சி குழும விதிகளை மீறி, அனுமதியின்றி கட்டிடம் கட்டியுள்ளனர். இந்த கட்டிடப் பணிகளுக்கு தடை விதித்து  2016 நவம்பர் 16ம்தேதி சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவின்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் உத்தரவை  அமல்படுத்த வளசரவாக்கம் மண்டல செயற்பொறியாளருக்கு உத்தரவிடக் கோரி ஸ்டீபன்  என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாநகராட்சி வக்கீல், சம்பந்தப்பட்ட அதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டதால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. சமீபத்தில் சம்பந்தப்பட்ட பொறியாளர் மரணமடைந்து விட்டார் என்று தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதிகள்,  பணிமாற்றம் செய்யப்பட்ட அதிகாரி குறித்தும், இறந்த பொறியாளர் குறித்தும் அறிக்கையில் குறிப்பிடவில்லை. 2016ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நோட்டீசின் அடிப்படையில் 5 ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கான  காரணத்தையும் தெரிவிக்கவில்லை.  கட்டுமானம் மேற்கொள்ள தடை விதித்து நோட்டீஸ் அனுப்பியதுடன் தங்கள் பணி முடிந்து விட்டதாக கருதி எந்த மேல் நடவடிக்கையையும் எடுக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனப் போக்குடன்  செயல்பட்டுள்ளனர். மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியவந்தவுடன் கட்டிடப்பணி தடை நோட்டீஸ் மட்டும் வழங்கிவிட்டு மேல் நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிடுகிறார்கள்.

அவ்வாறு நடவடிக்கைகள் எடுக்காததால் இந்த வகை கட்டிடங்களை அகற்ற கோரி ஏராளமான வழக்குகள் தொடரப்படுகின்றன. மாநகராட்சியின் இதுபோன்ற நடத்தைகளால் ஒவ்வொரு நாளும் நீதிமன்றங்கள் தர்மசங்கடத்திற்கு உள்ளாகின்றன.  நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்தும் அதிகாரிகளின் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எனவே, இந்த வழக்கில் 2016ம் ஆண்டே கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து பிறப்பித்த நோட்டீசின் மீது என்ன நடவடிக்கை  எடுக்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் விரிவான விளக்க அறிக்கையை  தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு ஜூன் 7ம் தேதி தள்ளிவைக்கப்படுகிறது என்றனர்.

Related Stories:

>