×

‘கொரோனாவால் நடத்த முடியவில்லை’ சேலத்தில் தனியார் பள்ளிக்கு மூடுவிழா: பெற்றோர் முற்றுகை

சேலம்: சேலத்தில் கொரோனாவால் தனியார் பள்ளியை மூடுவதாக அறிவித்ததால், பெற்ேறார் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே அத்வைதா ஆசிரமம் சாலையில் தனியார் மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவியதையடுத்து, மாநிலம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. இதன்படியே இப்பள்ளியும்  மூடப்பட்டது. ஆன்லைன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். ஒரு கல்வியாண்டு முடிந்தநிலையில், அடுத்த கல்வியாண்டு தொடங்க, தேர்ச்சி பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்பள்ளி நிர்வாகம் சார்பில்  நேற்று முன்தினம், மாணவ, மாணவிகளின் பெற்றோர் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், தங்களால் பள்ளியை நடத்த முடியவில்லை. பள்ளியை மூடுகிறோம்.

அதனால், தங்கள் குழந்தைகளின் டிசியை (மாற்றுச்சான்றிதழ்) வாங்கிச் சென்று வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள்,’’ எனக்கூறப்பட்டிருந்தது. அத்துடன் நிலுவையில் உள்ள கல்விக்கட்டணத்தையும் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.  இதை படித்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். ஆசிரியர்களுக்கு போன் செய்து விவரங்களை கேட்டனர். இந்நிலையில் நேற்று காலை, 30க்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். பள்ளி கேட்டை  பூட்டிவிட்டு, காவலாளி மட்டும் இருந்தார். இதனால், யாரிடம் பேசுவது எனத்தெரியாமல் அங்கிருந்து புறப்பட்டனர்.

அப்போது பெற்றோர் கூறுகையில், ‘‘பள்ளியை திடீரென மூடுவதால், இனி எந்த பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க முடியும். வேறு பள்ளிக்கு செல்லும் போது, புதிய சேர்க்கை எனக்கூறி நன்கொடை கேட்பார்கள். இப்போது இருக்கும் கஷ்டத்தில்,  எப்படி பிள்ளைகளை வேறு பள்ளியில் அதிக கட்டணம் செலுத்தி சேர்க்க முடியும். அதனால், இந்த பள்ளியை தொடர்ந்து நடத்திட மாவட்ட கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர். இதுபற்றி சேலம் மாவட்ட கலெக்டர்,  மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு கோரிக்கை மனுவை பெற்றோர் தரப்பில் அனுப்புயுள்ளனர். இதனிடையே பள்ளி நிர்வாகம் தரப்பில் கடந்த 6 மாதத்திற்கு முன், தங்களால் பள்ளியை நடத்த முடியாது என பள்ளிக்கல்வித்துறைக்கு  கடிதம் கொடுத்தது தெரியவந்துள்ளது.

Tags : Corona' Closing Ceremony ,Salem , ‘Corona Can’t Hold’ Closing Ceremony for Private School in Salem: Parental Siege
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...