சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களுக்கு 293 ஆக்சிஜன் செறிவூட்டிகள்: செயல்பாடுகளை ஆய்வு செய்தார் ஆணையர் ககன்தீப் சிங் பேடி

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சைகள் தேவைப்படுவதால், அதன் எண்ணிக்கையை அதிகரிக்க  சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கும் ஆக்சிஜன்  செறிவூட்டிகள்  கொள்முதல் செய்யப்பட்டு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அளிக்கப்பட உள்ளது. தமிழக முதல்வரிடம் பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் (10ம் தேதி) தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சிக்கு 300 ஆக்சிஜன்  செறிவூட்டிகளை வழங்கினார்கள். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் 300 ஆக்சிஜன்  செறிவூட்டிகளை ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் வழங்கினர்.

இந்த ஆக்சிஜன்  செறிவூட்டிகளை  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள  பல்வேறு மருத்துவமனைகளுக்கு உடனடியாக வழங்க ஆணையர் உத்தரவிட்டார். இந்நிலையில், ஆணையர் ககன்தீப் சிங் பேடி, ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் நேரடியாக சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டு  வழங்கப்பட்ட ஆக்சிஜன்  செறிவூட்டிகளின் செயல்பாட்டினை ஆய்வு செய்தார். தொடர்ந்து ஆணையாளர், சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள 114 படுக்கைகள் கொண்ட புதிய கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டார். ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனை ஆய்வின்போது  துணை ஆணையர் பி.ஆகாஷ் மற்றும் மருத்துவர்கள், பொறியாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories:

>