இத்தாலி கோப்பை கால்பந்து தொடர்ந்து 9 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜூவென்டஸ் காலி: இந்தமுறை இன்டர் மிலான் சாம்பியன்

மிலான்: தொடர்ந்து 9முறை இத்தாலி  கோப்பையை வென்ற நடப்பு சாம்பியன் ஜூவன்டஸ் 5வது இடத்துக்கு தள்ளப்பட, இந்த முறை இன்டர் மிலான்   சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுகிறது. இத்தாலியின் 123 ஆண்டுகள் பழமையான கால்பந்து  போட்டி ‘சீரி-ஏ’ இத்தாலி கோப்பை போட்டியாகும். நடப்புத் தொடரில் பங்கேற்றுள்ள 20 அணிகளும் தலா 38 ஆட்டங்களில் விளையாட வேண்டும்.   எல்லா அணிகளும் நேற்று முன்தினம் வரை தலா 35 ஆட்டங்களில் ஆடி முடித்துள்ளன.  இன்னும் தலா 3 ஆட்டங்கள் ஆட வேண்டிய நிலையில்  இன்டர் மிலன்(இன்டர்நேஷனல் மிலான்) இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்கிறது. அந்த அணி 35 ஆட்டங்களில் விளையாடி 26 வெற்றி, 7 டிரா, 2 தோல்விகளுடன் 85புள்ளிகளை குவித்துள்ளது. அதனால்  கோப்பையை  இன்டர்மிலன் வசமாவது உறுதியாகி விட்டது.

புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள  அட்லாண்டா, 3வது இடத்தில் உள்ள  ஏ.சி.மிலான்  ஆகிய அணிகள் தலா  35 ஆட்டங்களில் விளையாடி தலா  72 பு ள்ளிகளை பெற்றுள்ளன. இந்த 2 அணிகளும் எஞ்சிய 3 ஆட்டங்க வெற்றிப் பெற்றாலும் தலா 81 புள்ளிகள்தான் சேரும். அதனால் இன்டர் மிலான் 19முறையாக கோப்பையை வசப்படுத்தி விட்டது.  அதே நேரத்தில் நடப்பு சாம்பியன் ஜூவென்டஸ் நிலைமை பரிதாபம். உலகின் முன்னணி ஆட்டக்காரரான கிறிஸ்டியனோ ரொனால்டோ(போர்ச்சுகல்) உட்பட நட்சத்திர  வீரர்கள் பலர் இருந்தும் பலனில்லை. ஜூவென்டஸ் இதுவரை 35 ஆட்டங்களில் விளையாடி 20 வெற்றி, 9 டிரா, 6 தோல்விகளுடன்  69புள்ளிகளை பெற்று  பட்டியலில் 5 இடத்தில் இருக்கிறது. எஞ்சிய ஆட்டங்களில் வென்றாலும், மற்ற அணிகளின் தோல்விகளை பொறுத்து அதிகபட்சமாக 2வது இடம் கிடைக்கலாம்.  அந்த அணி இதுவரை 36முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதிலும்  2011-12ம் ஆண்டு முதல் 2019-20 வரை தொடர்ந்து 9 முறை சாம்பியன் வென்றது.

இத்தாலி கோப்பையில் மட்டுமின்றி நடப்பு ஐரோப்பிய சாம்பியன் லீக், யுஇஎப்சி ஐரோப்பா லீக் ஆகியவற்றிலும் ஜூவென்டஸ் அரையிறுதி வாய்பை இழந்து விட்டது. நடப்புத் தொடரின் இறுதித் சுற்றுப் போட்டிகள் மே 23ம் தேதி நடக்கிறது. அன்று இன்டர் மிலான் அணிக்கு இத்தாலி கோப்பையை வழங்குவார்கள்.

அதிக கோல் ஆறுதல்

கோப்பையை இழந்தாலும் நடப்புத் தொடரில் அதிக கோல் அடித்த வீரர்களின் பட்டியலில் ஜூவென்டஸ் வீரர் கிறி்டியனோ ரொனால்டோ முதல் இடத்தில் இருக்கிறார். அவர் இதுவரை 27 கோல்களை அடித்துள்ளார். சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற உள்ள இன்டர் மிலான் வீரர் ரோமேலு லுகாகு(பெல்ஜியம்) 21 கோல்களுடன் 4வது இடத்தில் இருக்கிறார்.

Related Stories: