16வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடங்கியது புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்றனர்: தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார்: சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு

* முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 10.06 மணிக்கு பதவி ஏற்றுக்கொண்டார். அவர் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் வழங்கினார்.

* தமிழக சட்டப்பேரவையில் மொத்தம் 223 பேர் பதவி ஏற்றனர். 10 பேர் பதவியேற்கவில்லை.

* பேரவை கூட்டம் மீண்டும் நாளை (இன்று) காலை 10 மணிக்கு நடைபெறும். அப்போது சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும்.

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 223 எம்எல்ஏக்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார். கொரோனா காரணமாக 10 எம்எல்ஏக்கள் நேற்று பதவியேற்கவில்லை. சபாநாயகராக மு.அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்.  தமிழகத்தில் நடந்து முடிந்த 16வது சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்  முதல்வராக கடந்த 7ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில், தமிழக சட்டமன்ற உறுப்பினர்களாக புதிதாக தேர்வு செய்யப்பட்ட 234 பேரும் எம்எல்ஏக்களாக 11ம் தேதி (நேற்று) பதவியேற்றுக் கொள்வார்கள். இதற்காக தமிழக சட்டப்பேரவை கூட்டம் 11ம் தேதி காலை 10 மணிக்கு கூடும் என்றும், இவர்களுக்கு தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூட்டம் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தை தொடங்கி வைத்து தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசும்போது, ‘‘16வது சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்வு பெற்று, முதல் கூட்டத்திற்கு வருகை தந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். தற்காலிக சபாநாயகராக என்னை நியமனம் செய்த முதல்வருக்கும், கவர்னருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பேரவைக்கு வந்திருக்கிறோம். இதை கருத்தில் கொண்டு அனைவரும் பணியாற்ற வேண்டும். முதலாவதாக, இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். முதல்வர், அமைச்சர்கள், கட்சி தலைவர்கள், முன்னாள் அமைச்சர்களை தொடர்ந்து மற்றவர்கள் அகர வரிசைப்படி பதவிப்பிரமாண உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். பதவியேற்க வரும்போது, தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை உறுப்பினர்கள் அனைவரும் சட்டப்பேரவை செயலாளரிடம் வழங்க வேண்டும். உளமாற அல்லது கடவுள் அறிய என ஏதாவது ஒரு வார்த்தையை மட்டும் பயன்படுத்தி உறுதிமொழி எடுக்க வேண்டும்” என்றார்.

அதன்பின்னர், ஒவ்வொருவராக எம்எல்ஏ பதவியை ஏற்றுக்கொண்டனர். முதலில், முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 10.06 மணிக்கு பதவி ஏற்றுக்கொண்டார். அவர் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் வழங்கினார். பின்னர், உறுதிமொழியை வாசித்தார். அப்போது, ‘‘சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான், சட்டமுறைப்படி நிறுவப்பெற்றுள்ள இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் உண்மையான நம்பிக்கையும், பற்றுருதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ளுகிற கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் உளமார உறுதி கூறுகிறேன்” என்றார். தொடர்ந்து, உறுதிமொழி படிவத்தில் அவர் கையெழுத்திட்டு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் வழங்கினார்.

அவரை தொடர்ந்து, அமைச்சர்களும், அதன் பின்னர், முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றுக்கொண்டார். 39வது நபராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். பிறகு பாமக ஜிகே.மணி, பாஜ நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றனர். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்களும், காங்கிரஸ், பாமக, பாஜ, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிய கம்யூ., இந்திய கம்யூ., மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சிபாரதம் உள்ளிட்ட அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களும் ஒன்றன்பின் ஒன்றாக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். மொத்தம் 223 பேர் பதவி ஏற்றனர். 10 பேர் பதவியேற்கவில்லை: ஏற்கனவே தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் பதவிப்பிரமாணம் செய்து வைத்ததையடுத்து, இதுவரை 224 எம்எல்ஏக்கள் பதவியேற்றுள்ளனர்.

இதில் திமுக அமைச்சர்கள் சிவசங்கர் (பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை), மதிவேந்தன் (சுற்றுலாத்துறை), திமுக உறுப்பினர்கள் காந்திராஜன் (வேடச்சந்தூர்), சண்முகையா (ஒட்டப்பிடாரம்), வரலட்சுமி மதுசூதனன் (செங்கல்பட்டு), வெங்கடாச்சலம் (அந்தியூர்) ஆகியோர் பதவியேற்கவில்லை. அதிமுக சார்பில் வைத்திலிங்கம் (ஒரத்தநாடு), விஜயபாஸ்கர் (விராலிமலை), கடம்பூர் ராஜு (கோவில்பட்டி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) உள்ளிட்ட 10 பேர் பதவியேற்கவில்லை. இதில் பலருக்கு கொரோனா என்பதால் நேற்று பதவியேற்கவில்லை. இவர்கள் இன்று அல்லது ஓரிரு நாளில் சபாநாயகர் அறைக்கு சென்று பதவியேற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று பிற்பகல் 2.07 மணிக்கு முடிவடைந்தது. பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசும்போது, `சட்டப்பேரவையில் இன்று (நேற்று) பதவியேற்காத உறுப்பினர்கள் 12ம் தேதி (இன்று) பதவியேற்றுக்கொள்ளலாம்.

மீண்டும் நாளை (இன்று) பேரவை கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறும். அப்போது சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும்’ என்று தெரிவித்தார். இதையடுத்து நேற்றைய நிகழ்ச்சிகள் முடிவடைந்தன. இன்று காலை 10 மணிக்கு மீண்டும் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. இந்த கூட்டத்தில், சபாநாயகராக மு.அப்பாவு, துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்க உள்ளனர்.

உளமாற, கடவுள் அறிய என கூறி பதவியேற்ற எம்எல்ஏக்கள்

எம்எல்ஏக்கள் பதவியேற்கும்போது `உளமாற’ உறுதி கூறுகிறேன் அல்லது `கடவுள் அறிய’ என்று கூறி பதவியேற்க வேண்டும். வேறு எந்த வார்த்தையும் பயன்படுத்த கூடாது என்று தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் `உளமாற’ என்று கூறியும், அதிமுக எம்எல்ஏக்கள் `கடவுள் அறிய’ என்றும் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

4 மணி நேரம் நடந்த பதவியேற்பு

16வது சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 234 எம்எல்ஏக்களும் பதவிப்பிரமாணம் செய்து கொள்வதற்காக நேற்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசி முடித்ததும், 10.06 மணிக்கு முதல் நபராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். இறுதியாக சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் பதவியேற்றார். அப்போது, நகைச்சுவையாக பேசிய அமைச்சர் துரைமுருகன், ஸ்டாலினில் தொடங்கி குமாரில் முடிந்தது என்று கூறினார். கடைசி உறுப்பினர் பதவிப்பிரமாணம் செய்தபோது நேரம் பிற்பகல் 2.07 மணியாகும். இதையடுத்து நேற்றைய சட்டப்பேரவை கூட்டம் முடிவடைந்தது. சுமார் 4 மணி நேரம் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.

திமுக, அதிமுக

தலைவர்களுக்கு மரியாதை கொடுத்த எம்எல்ஏக்கள்

எம்எல்ஏக்கள் பதவியேற்பதற்கு முன் தங்கள் கட்சி தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு பதவியேற்றுக் கொண்டனர். அதன்படி திமுக எம்எல்ஏக்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வணக்கம் தெரிவித்தனர். அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு பதவியேற்றனர். அதேபோன்று அதிமுக, காங்கிரஸ், பாஜ, பாமக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக எம்எல்ஏக்களில் பலரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். எதிர்க்கட்சி தலைவர்கள் இபிஎஸ், ஓபிசுக்கும் வணக்கம் தெரிவித்தனர்.

உதயநிதி ஸ்டாலினுக்கு மேஜையை தட்டி வரவேற்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் நபராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அதை தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர். அடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். அதேபோன்று, உதயநிதி ஸ்டாலின் பதவிப்பிரமாணம் செய்து கொண்டபோது திமுக எம்எல்ஏக்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். பதவியேற்றுக் கொண்டதும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சி தலைவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வணக்கம் தெரிவித்து வாழ்த்து பெற்றார்.

ராகுல் காந்தி வாழ்க

காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் எம்எல்ஏ பதவிப்பிரமாணம் வாசித்து முடித்ததும், அன்பு தலைவர் ராகுல் காந்தி வாழ்க, அன்பு தலைவி சோனியா காந்தி வாழ்க என்று கூறினார். அதேபோன்று வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன், தந்தையும் தாயும் கண்கண்ட தெய்வம் என்று கூறினார். பாஜ உறுப்பினர் வானதி சீனிவாசன் பதவிப்பிரமாணம் செய்தபோது, தமிழ் வாழ்க, வந்தே மாதரம் என்று கூறினார். ெகாங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் பதவிப்பிரமாணம் படித்து முடித்ததும், தீரன் சின்னமலையை வணங்குகிறேன் என்று கூறினார்.

முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி

எம்எல்ஏக்கள் பதவியேற்பதற்காக காலை 8.45 மணி முதலே சட்டப்பேரவைக்கு வர தொடங்கினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தங்கள் கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்களையும் காலை 9.02 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்திற்கு அழைத்து வந்து விட்டு சென்றார். 9.20 மணிக்கு உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பி.ராஜா, செந்தில்பாலாஜி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேரவைக்கு வந்தனர். 9.40 மணிக்கு பாஜ எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன் தலைமையில் வந்தனர். 9.45 மணிக்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் எம்எல்ஏக்கள் வந்தனர். 9.57 மணிக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சட்டப்பேரவைக்கு வந்தனர். 9.59 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைக்குள் வந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி முதல்வருக்கு வணக்கம் கூறி வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். ஓ.பன்னீர்செல்வமும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறினார்.

செல்பி எடுத்த எம்எல்ஏக்கள்

தமிழக சட்டப்பேரவையில் நேற்று எம்எல்ஏக்கள்  பதவியேற்றுக் கொண்டனர். முன்னதாக புதிய எம்எல்ஏக்களில் சிலர் தங்கள்  செல்போன் மூலம் சட்டப்பேரவைக்குள் அமர்ந்து இருப்பது போன்று செல்பி  எடுத்துக் கொண்டனர். சட்டப்பேரவைக்குள் செல்போன் வைத்திருக்க மட்டுமே  அனுமதிக்கப்பட்டுள்ளது. செல்போனில் பேசவோ, செல்பி மற்றும் படம் எடுக்கவோ அனுமதி  இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>