×

தகுதியானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால் 2வது அலை மட்டுமல்ல... 3வது, 4வது அலை கூட வரும்!: நகர் பகுதியில் தீவிரம் காட்டும் கொரோனா கிராமத்திலும் புகுந்தது

புதுடெல்லி: தகுதியானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால், இரண்டாவது அலை மட்டுமல்ல மூன்றாவது, நான்காவது அலை கூட வரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நகர் பகுதியில் தீவிரமாக உள்ள கொரோனா பரவல், தற்போது கிராமபகுதிகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவை இன்னும் என்னவெல்லாம் செய்யும் என்பது தெரியவில்லை. தடுப்பூசி, ரெம்டெசிவர், ஆக்சிஜன், மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை, வரிசை கட்டி நிற்கும் ஆம்புலன்ஸ்கள், நிரம்பி வழியும் மருத்துவமனைகள், எரிந்து கொண்டே இருக்கும் தகன மேடைகள் என்று கொரோனாவால் பாதித்த மற்றும் அவரை சார்ந்தவர்கள் ஒவ்ெவாருவரும் மரணத்தின் எல்லைக்ேக சென்று வருகின்றனர்.

நாடு முழுவதும் நடக்கும் மரண சம்பவங்கள் மனதை காயப்படுத்துகின்றன. பீகார் மாநிலம் பாட்னாவில் 6 வயது மகள் ஒருவர், தனது தந்தையின் இறந்த உடலுடன் இரவு முழுவதும் தூங்கினாள். காலையில் எழுந்ததும், பிஸ்கட் சாப்பிட்டுவிட்டு தனது தந்தையின் மொபைல் போனில் வீடியோ கேம்ஸ் விளையாடினாள். தனது தந்தை இரவில் கொரோனாவால் இறந்துவிட்டார் என்று அந்த குழந்தைக்கு தெரியவில்லை. அதேபோல், உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில்  வயதான ஒருவர் தனது மனைவியின் சடலத்தை மிதிவண்டியில் எடுத்துச் செல்கிறார். மற்றொரு இடத்தில் நோய்வாய்ப்பட்ட தன்னுடைய தாய்க்கு ஆக்சிஜன் தேவை என்பதால், அதனை நிரப்ப காலி சிலிண்டருடன் ஒரு நாள் இரவு முழுவதும் வரிசையில் அன்பு மகள் காத்திருந்தாள்.

ஆனால், ஆக்சிஜனை நிரப்புவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், அவரது தாயார் இறந்துவிட்டதாக செய்தி வந்தது. இந்த செய்திகள் அனைத்தும் இதயத்தை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. நாட்டின் தலைநகரான டெல்லியில் ஆக்சிஜன் சிலிண்டரைப் பெறவோ அல்லது குறிப்பிட்ட மருத்துவமனையில் அனுமதிக்க விரும்பினாலோ எதுவும் சாதாரணமாக கிடைத்துவிடாது. எவ்வளவு பணம் வைத்து இருந்தாலும் எளிதில் வேலைக்கு ஆகாது. டெல்லியின் நகர்பகுதியில் இந்த சூழ்நிலை என்றால், புறநகர் பகுதிகளின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. டெல்லி, மீரட், லக்னோ, நாக்பூர், நாசிக் என்று நாட்டின் எல்லா நகரங்களிலும் கொரோனா நோயாளிகளின் மூச்சுத் திணறல், அழுகை, அன்புக்குரியவர்களைக் காப்பாற்றுவதற்கான போராட்டம் ஆகியவற்றை பார்க்க முடிகிறது.

ஏதேனும் உதவி தேவைப்பட்டால், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களை பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, உலக தடுப்பூசி அட்டவணையில் இந்தியாவை ஒரு பெரிய சக்தியாகப் பார்த்தனர். அதே, அடுத்த சில வாரங்களில் மக்களின் சிகிச்சைக்காக ஆக்சிஜனைக் கூட அரசால் கொடுக்க முடியவில்லை. தடுப்பூசியை பெற்ற சிறிய நாடுகளும், தற்போது இந்தியாவுக்கு உதவிகளை அளித்து வருகின்றன. கொரோனாவின் முதல் அலையை வெற்றி கொண்டதாக கூறும் மத்திய அரசு, தற்போது இரண்டாவது அலையில் சிக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக பல்ேவறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி ஜன. 16ம் தேதி முதல் போடப்பட்டு வந்தாலும் கூட, அதனை தீவிரப்படுத்தாததும், சமூக இடைவெளி, முகக் கவசம், நெறிமுறைகளை சரியாக பின்பற்றாததும் தான், தற்போதைய நிலைமைக்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நாட்டின் சுகாதார சேவைகளை விரிவுபடுத்துவதற்கும், வலுப்படுத்துவதற்கும் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய மத்திய அரசு, பல்வேறு தளர்வுகளை அறிவித்ததும் கொரோனா பரவலுக்கு காரணமாக மாறிவிட்டது. நகரப்பகுதியில் இருந்த கொரோனா தற்போது தொலைதூர கிராமத்தையும் அடைந்துவிட்டது. மற்ற நாடுகளில் ஏற்பட்ட இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை குறித்த முன்னெச்சரிக்கைகள் கவனிக்கப்படாமல் இருந்ததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

முதல் அலையின் போது இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை ஒப்பிட்டு பார்க்கும் போது, தற்போது ஏற்பட்டுள்ள இரண்டாவது அலையானது அனைத்து புள்ளிவிவரங்களையும் தகர்த்துவிட்டது. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு ஒரே தீர்வாக, விரைவாக தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். கொரோனா நெறிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். இல்லையென்றால், இரண்டாவது அலை மட்டுமல்ல, மூன்றாவது, நான்காவது அலையையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரே கிராமத்தில் 7 நாளில் 10 பேர் பலி
உத்தரபிரதேச மாநிலம் பிப்ரைச் பகுதியின் லுஹாசி கிராமத்தில் கடந்த 7 நாட்களுக்குள் 10 பேர் கொரோனா நோய் அறிகுறியால் இறந்தனர். இவர்களில் ஒரே குடும்பத்தில் கடந்த 9 நாட்களில் 4 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் அனைவரும் காய்ச்சல், இருமல், தலைவலி, சுவாசிப்பதில் சிக்கல் போன்ற காரணங்களால் இறந்தனர். இந்த மரணங்கள் யாவும் கொரோனா அறிகுறியுடன் நடந்திருந்தாலும் கூட, இறந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த எவரும், தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவில்ைல. அதனால், ஒட்டுமொத்த கிராமமே மயான அமைதியாக பீதியடைந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் இந்த கிராமத்தில் முகாமிட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ேமற்கொண்டு வருகிறது.

Tags : Nagar ,Corona , If the eligible people are not vaccinated, not only the 2nd wave but also the 3rd and 4th wave will come !:
× RELATED மாதவரம் மண்டலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றை சீரமைக்க பொது மக்கள் வேண்டுகோள்