×

குவியும் நோயாளிகள் - அதிகரிக்கும் உயிர் பலிகள்; குமரியில் ஆக்ஸிஜன் தேவை பல மடங்கு அதிகரிப்பு: பணியாளர்கள் பற்றாக்குறையை தீர்க்க வலியுறுத்தல்

நாகர்கோவில்: குமரி மருத்துவக்கல்லூரியில் நோயாளிகள் அதிகளவில் குவிந்து வருவதால் ஆக்ஸிஜன் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் பணியாளர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், மருத்துவ பணியாளர்கள் திணறி வருகிறார்கள். நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பால், குமரி மாவட்ட மருத்துவக்கல்லூரியிலும் ஆக்ஸிஜன் பிரச்னை தலை தூக்கி உள்ளது. குமரி மருத்துவக்கல்லூரியில், 24 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்ஸிஜன் நிரப்பகம் உள்ளது.

இதில் தற்போது நாள் ஒன்றுக்கு 8  ஆயிரம் லிட்டர் தான் உள்ளது.  ஆனால் தேவை சராசரியாக நாள் ஒன்றுக்கு இப்போது 6 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இதனால் இருப்பில் உள்ள ஆக்ஸிஜன் வேகமாக தீருகிறது.
560 நோயாளிகளில் குறைந்த பட்சம் 300 பேருக்கு 24 மணி நேரமும் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இதனால் ஆக்ஸிஜன் விரைவாக தீர்ந்து விடுகிறது. நிலைமையை சமாளிக்க அவ்வப்போது வெளி மாவட்டங்களில் இருந்து அவசர தேவைக்காக 4 டன், 5 டன் என ஆக்ஸிஜன் பெற்று சமாளித்து வருகிறார்கள். முன்பெல்லாம் ஒரு மாதத்துக்கே 5 டன் மட்டுமே ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலை இருந்தது.

ஆனால் இப்போது ஒரு நாளைக்கு கூட சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருவது டாக்டர்களை கலக்கம் அடைய செய்துள்ளது. இதற்கு அடுத்த பிரச்னையாக பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. ஒரு நோயாளியை கண்காணித்து ஆக்ஸிஜன் அளவு, சர்க்கரை அளவு உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்து தேவையான ஊசி மருந்துகளை செலுத்தவே 20 நிமிடத்தில் இருந்து 30 நிமிடம் வரை ஆகிறது. நோயாளிகள் அதிகமாக இருப்பதால் செவிலியர்களால் முழுமையாக கவனிக்க முடிய வில்லை. மேலும் நோயாளிகளை வார்டுகளுக்கு கொண்டு செல்ல கூட பணியாளர்கள் இல்லை. தூய்மை பணியாளர்கள் தான் சில சமயங்களில் கொரோனா வார்டுகளுக்கு உணவும் கொண்டுவர வேண்டிய நிலை உள்ளது.

செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால் வார்டுகளில் உள்ள நோயாளிகள் ஆத்திரமடைந்து தகராறு செய்யும் நிலை உள்ளது.  பணியாளர்கள் பற்றாக்குறையை  தீர்த்தால், ஓரளவு நிலைமையை சமாளிக்க முடியும் என டாக்டர்கள் கூறினர். மருத்துவ கல்வி இயக்குனரகம் அல்லது கலெக்டர் பொறுப்பேற்காமல், தற்காலிக பணியாளர்களை மருத்துவக்கல்லூரி தேர்வு செய்ய முடியாது. அவ்வாறு தேர்வு செய்தால் அவர்களுக்கு சம்பளம் வழங்குவது யார்? என்பதிலும் பிரச்சினை வரும். எனவே தான் மருத்துவக்கல்லூரி டீன் இந்த விவகாரத்தில் மவுனமாக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த முறை மாநகராட்சியில் இருந்து சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் தற்காலிகமாக எடுத்து மருத்துவக்கல்லூரிக்கு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று மகேந்திர கிரி ஐ.எஸ்.ஆர்.ஓ. மையத்தில் இருந்து, நேற்று 3500  லிட்டர் திரவ ஆக்ஸிஜன் டேங்கரில் கொண்டு வரப்பட்டது. இவை பாதுகாப்புடன், மருத்துவக்கல்லூரியில் உள்ள ஆக்ஸிஜன் நிரப்பகத்துக்கு மாற்றப்பட்டது. இருப்பினும் தேவை அதிகமாக உள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் இல்லாததால் நோயாளிகளை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு மாற்றி வருகிறார்கள். எனவே நிலைமையை சமாளிக்க கூடுதலாக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. மேலும் ஆக்ஸிஜன் நிரப்ப சிலிண்டர்களும் தற்போது அதிகம் தேவைப்படும் நிலை உள்ளதாக டாக்டர்கள் கூறினர்.

பீதி கிளப்ப வேண்டாம்
இதற்கிடையே மருத்துவக்கல்லூரியில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் உறவினர்கள், சமூக வலை தளங்களில் மக்களிடையே பீதியை கிளப்பும் வகையில் செயல்படுவதாக டாக்டர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மிகுந்த மன உளைச்சல், சிரமங்களுக்கு இடையே பணியாற்றி வருகிறோம். தேவையில்லாமல், மக்களிடையே மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்களுக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் யாரும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags : Kumari , Accumulating patients - increasing casualties; Multiple increase in oxygen demand in Kumari: Insistence to solve staff shortage
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...