×

ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்க வல்லுனர் குழு பரிந்துரை

தஞ்சை: டெல்டாவில் வரும் ஜூன் மாதம் குறுவை சாகுபடி செய்ய பாசனத்துக்காக நடப்பாண்டு மேட்டூர் அணையை இயல்பாகத் திறக்க வேண்டிய ஜூன் 12ம் தேதி திறப்பதற்கு மூத்த வேளாண் வல்லுனர் குழுப் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து அக்குழுவைச் சேர்ந்த கலைவாணன் கூறியதாவது: மேட்டூர் அணையில் தற்போது 62 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி பாசனத்துக்காக 167.25 டி.எம்.சி. தண்ணீர் பெறப்பட வேண்டும். எனவே, மொத்தமாக 229 டி.எம்.சி. தண்ணீர் பாசனத்துக்கு கிடைக்கும். மேட்டூர் அணை நீரைக் கொண்டு தமிழகத்தில் 12 மாவட்டங்களும், காரைக்கால் பகுதியும் பயனடைகின்றன.

இப்பகுதியில் நடப்பாண்டு குறுவை பட்டத்தில் 3.50 லட்சம் ஏக்கர், தாளடியில் 3.25 லட்சம் ஏக்கர், சம்பா பருவத்தில் 11 லட்சம் ஏக்கர், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் 80,000 ஏக்கர் என மொத்தம் 18 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறுவை பருவத்தில் 1.75 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய நிலத்தடி நீர் வசதி உள்ளது. மேட்டூர் அணையைத் திறப்பதற்கு முன்பாகவே இப்பரப்பில் நாற்றுவிட்டு, நடவு செய்தால் மேட்டூர் அணையிலிருந்து நீர் தேவை சுமார் 15 டி.எம்.சி. குறைகிறது. இதேபோல, சம்பா பருவத்தில் 5 லட்சம் ஏக்கரில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்யும் மழை நீரைக் கொண்டு,

புழுதி உழவு செய்து நேரடி நெல் விதைப்பு செய்வதால், நாற்றங்கால் தயாரிப்பு, நடவு வயல் சேறு கலக்குதல் போன்றவற்றுக்கு நீர் தேவைப்படாததால் 25 டி.எம்.சி.க்கு மேல் அணை நீரைச் சேமிக்க முடியும். நிலத்தடி நீரையும், மழையையும் பயன்படுத்தினால், அணை நீர் 229 டி.எம்.சி.யை கொண்டு சாகுபடி செய்ய முடியும். எனவே, நிகழாண்டு பயிர் சாகுபடி பாசனத்துக்காக மேட்டூர் அணையை இயல்பாகத் திறக்க வேண்டிய ஜூன் 12ம் தேதி திறப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. இதற்கு வசதியாக நிலத்தடி நீர் வசதியுள்ள இடங்களில் எல்லாம் அணையைத் திறப்பதற்கு முன்பாகவே குறுவை நாற்றுவிட்டு, நடவு செய்து முடித்திட விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Mattore Dam , Expert panel recommends opening of Mettur Dam on June 12
× RELATED மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,400 கன அடியாக சரிவு