×

இந்திய டெஸ்ட் அணிக்கு இளம் வீரர் அபிமன்யு ஈஸ்வரனை தேர்வு செய்தது ஏன்?

புதுடெல்லி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றிற்கான இந்திய அணி கடந்த 7 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜாஸ்பிரித் பும்ரா என இந்திய அணியின் முன்னணி வீரர்கள், 20 பேர் கொண்ட பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இந்த அணியுடன் மேலும் நான்கு கூடுதல் வீரர்களான, பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், அர்சான் நக்வஸ்வாலா மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோரும் இங்கிலாந்துக்கு செல்லஇருக்கின்றனர். கூடுதல் வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள பிரசித் கிருஷ்ணா மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் ஐபிஎல் தொடர்களில் பங்கு பெற்றதால் அவர்களைப் பற்றி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏற்கனவே தெரியும்.

ஆனால் மற்ற இரண்டு வீரர்களான அர்சான் நக்வஸ்வாலா மற்றும் அபிமன்யு ஈஸ்வரனைப் பற்றி தெரியாததால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். அவர்களைப் பற்றி இணையத்தில் தேடி வருகின்றனர். இந்த இருவரில் அபிமன்யு ஈஸ்வரன் இந்திய அணிக்கு ஓபனிங் பேட்ஸ்மேன் என்ற இடத்திற்கு தான் கூடுதல் வீரராக தேர்த்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பது பற்றிய விவரம்:- 25 வயதாகும் வலது கை துவக்க ஆட்டக்காரரான அபிமன்யு ஈஸ்வரன், டேராடூனில் பிறந்து மேற்கு வங்காளத்திற்காக ரஞ்சி டிராபி முதலிய உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்திருக்கிறார்.

2018-2019ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற ரஞ்சி டிராபியில் அனைவரும் வியக்கும் வண்ணம் விளையாடிய அபிமன்யு ஈஸ்வரன், அத்தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 861 ரன்கள் அடித்து அசத்தினார். அத்தொடரில் அவருடைய சராசரி 95.66 ஆகும். இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற்ற ரஞ்சி டிராபியில் பெங்கால் அணியை வழிநடத்தும் பொறுப்பு அபிமன்யு ஈஸ்வரனுக்கு வழங்கப்பட்டது. 2019-2020ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி போட்டியில் சிறப்பாக பேட்டிங் விளையாடாதபோதும், பெங்கால் அணியை தனது அற்புதமான கேப்டன்சியின் மூலம் இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார்.

அதைத் தொடர்ந்து அந்த ஆண்டே நடைபெற்ற துலீப் டிராபியில் இந்தியா ரெட் அணிக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அத்தொடரின் இறுதிபோட்டியில், இந்தியா கிரீன் அணிக்கு எதிராக 153 ரன்கள் அடித்து அசத்திய ஈஸ்வரினின் மீது இந்திய தேர்வுக் குழுவின் கவனம் திரும்பியது. இதையடுத்தே அவரை இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர்கள் இந்த ஆண்டு நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் கூடுதல் வீரராக தேர்வு செய்திருந்தனர். நடந்து முடிந்த இங்கிலாந்து தொடரைப் பற்றி அபிமன்யு ஈஸ்வரன் கூறியதாவது, ``கடந்த இந்தியா இங்கிலாந்து தொடரின்போது விராட்கோலி, ரோஹித் சர்மா, புஜாரா ஆகிய ஜாம்பவான்களின் ஆட்டத்தை நேரில் கண்டேன்.

அதை நான் மகிழ்ச்சியாக அனுபவித்ததோடு மட்டுமல்லாமல், என் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான பள்ளியாகத் தான் அதை நான் நினைத்தேன். அவர்கள் அங்கு பயிற்சி செய்யும்போது, அவர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். ஆனால் அப்போது அதனை எல்லாம் வெளிக்காட்ட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் நான் கற்றுக்கொண்டது எல்லாம் எதிர்காலத்தில் நிச்சயமாக எனக்கு உதவும்’’ என்று அவர் கூறினார். இதுவரை 64 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள அபிமன்யு ஈஸ்வரன் 43.57 என்ற சராசரியில், மொத்தம் 4401 ரன்கள் குவித்துள்ளார். ஒரு மேட்சில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 233 ஆகும்.

இந்திய அணியில் சில காலமாகவே ஓபனிங்கில் சொதப்பி வந்த ஷிகர் தவான், ப்ரித்வி ஷா ஆகியோரின் இடத்தை நிரப்புவதற்குதான் இந்திய தேர்வுக்குழு அபிமன்யு ஈஸ்வரனை அணிக்குள் எடுத்து வந்திருக்கிறது. தற்போது இந்திய அணியின் ஓபனராக ரோஹித் சர்மாவுடன் களமிறங்கும் சுப்மன் கில் ஐபிஎல் தொடரில் அவுட் ஆஃப் பார்மில் இருந்தார். ஒருவேளை அவர் இங்கிலாந்து தொடரிலும் சொதப்பினால், நிச்சயமாக அவருக்குப் பதிலாக அபிமன்யு ஈஸ்வரனுக்கு, இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்றே சொல்லலாம்.

Tags : Abhimanyu Eeswaran ,Indian Test team , Why was youngster Abhimanyu Eeswaran selected for the Indian Test team?
× RELATED இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பதவி விலகினார் கோஹ்லி