தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி இன்று துவக்கம்?

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி இன்று முதல் துவங்கும் என தெரிகிறது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் இருக்கும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 27ம் தேதி தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க அனுமதி அளித்து தமிழக அரசு கடந்த 29ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

மேலும், உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் கண்காணிப்புக்குழுவும் அமைக்கப்பட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, தேவையான அனுமதி வழங்கினர். கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்ததன் அடிப்படையில் கடந்த வாரம் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் தேவையான அனைத்து முன் இயக்க சோதனைகளும் செய்யப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளது என ஆலை நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு அங்குள்ள மெயின் டேங்கில் இருந்து ஆக்சிஜன் பிளாண்ட்டுக்கு மட்டும் தண்ணீர் கொண்டு செல்லும் விதமாக புதிய பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்குள்ள ஆக்சிஜன் பிளாண்ட்டுக்கு மட்டும் தண்ணீர் கொண்டு செல்ல முடியும். மேலும் ஆக்சிஜன் பிளாண்ட்டில் ஸ்டெர்லைட் பணியாளர்கள் மூலம் பராமரிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் ஆக்சிஜன் உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இன்று அல்லது நாளை ஆக்சிஜன் உற்பத்தி துவங்கும் என தெரிகிறது. ஆனால் இத்தகவலை ஆலை நிர்வாகமோ அல்லது ஆலைக்காக கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுவோ உறுதிப்படுத்தவில்லை.

Related Stories:

>