சத்தியமங்கலத்தில் 80 படுக்கையுடன் கொரோனா சிகிச்சை மையம் துவக்கம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் 80 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தனியார் பள்ளிகள்,  கல்லூரிகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட கட்டிடங்களை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து ஈரோடு கலெக்டர் கதிரவன் உத்தரவின் பேரில் மாவட்ட துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) சவுண்டம்மாள் பரிந்துரையின் பேரில் உக்கரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கணேஷ் மேற்பார்வையில் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள தனியார் பள்ளி கட்டிடத்தில் 80 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் நேற்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சத்தியமங்கலம், பவானிசாகர் மற்றும் டி.என்.பாளையம் ஆகிய 3 வட்டாரங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிந்து அவர்களை சத்தியமங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு அழைத்து சென்று ஸ்க்ரீன் டெஸ்ட், செய்து காய்ச்சல், சளி அறிகுறி இல்லாத கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களை மருத்துவரின் பரிந்துரையின்பேரில் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. காய்ச்சல் மற்றும் சளி அறிகுறியுடன் கூடிய கொரோனா தொற்று உள்ள நபர்களை ஸ்கிரீன் டெஸ்ட், எக்ஸ்ரே, ஈசிஜி, ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் கொரோனோ சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்படும்.

இதற்கென 3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள், 3 சுகாதார ஆய்வாளர்கள், ஒரு ஆய்வக நுட்பனர் மற்றும் எக்ஸ்ரே டெக்னீசியன் தொடர்ச்சியாக இந்த சிகிச்சை மையத்தில் பணியில் இருப்பார்கள். கொரோனா சிகிச்சை மையத்திற்கு தேவையான தங்கும் இடம், உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை சத்தியமங்கலம் தாசில்தார் (பொறுப்பு) பெரியசாமி மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் செய்துள்ளதாக தெரிவித்தனர்.

Related Stories:

>