கொரோனா நிவாரண தொகைக்கு வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம்: திண்டுக்கல் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

திண்டுக்கல்: தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது திமுக தலைமையிலான ஆட்சி அமைந்து தான் முதல்வராக பொறுப்பேற்றால் கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி அவர் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து மு.க.ஸ்டாலின் முதல்வரானதும் முதல் கையெழுத்தாக தமிழகத்தில் வாழும் 2 கோடியே 7 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார். அதன்படி ரூ.4 ஆயிரத்தில் முதல் தவணையாக தமிழகம் முழுவதும் வரும் மே 15ம் தேதி முதல் ரூ.2 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

நேற்று சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த இத்திட்டம் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. தொடர்ந்து நேற்றே தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்க ரேஷன்கடை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடை பணியாளர்கள் இதற்கான பணியில் ஈடுபட்டனர். முகக்கவசம் அணிந்து வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கான டோக்கன்களை வழங்கினர். 2 நாட்களில் டோக்கன் முழுவதும் வழங்கப்பட்டு விடுமென்றும்,

அதில் குறிப்பிட்டிருக்கும் தேதியில் டோக்கனை கொண்டு சென்று ரேஷன் கடைகளில் பணத்தை பெற்று கொள்ளலாமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கால் வேலையிழந்து வாழ்வாதாரமின்றி ஏழைகள் தவித்து வரும் நிலையில் மக்களின் சிரமமான சூழ்நிலையை உணர்ந்து உடனடியாக நிவாரணத்தொகை வழங்க உத்தரவு பிறப்பித்த தமிழக அரசை இல்லத்தரசிகள் பாராட்டி வருகின்றனர். தவிர, விநியோகிக்கப்படும் டோக்கனில் முதல்வர் படம், அரசியல் தலைவர்களின் படம், பெயர்கள் ஏதுமின்றி அரசு முத்திரை மட்டும் இருப்பது நடுநிலையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

முதல்வருக்கு நன்றி

திண்டுக்கல்லை சேர்ந்த நித்யா, ராதா கூறுகையில், ‘திமுக தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் ஜூன் மாதம் கொரோனா  நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என அறிவித்திருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் முதல்கட்டமாக மே மாதமே ரூ.2000 வழங்குவது மிகவும் வரவேற்கத்தக்கது. கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் இந்த சூழ்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவால் வேலை இல்லாமல் தவித்து வரும் தங்களுக்கு இந்த ரூ.2000 பெரிய உதவியாக இருக்கும். இதனை முன்கூட்டியே வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி’ என்றார்.

1,035 கடைகள்: 6.25 லட்சம் அட்டைகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் 747 முழுநேர நியாய விலை கடை மற்றும் 288 பகுதிநேர நியாய விலை என 1,035கடைகளில் உள்ள 6 லட்சத்து 35 ஆயிரம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்கட்ட நிவாரண தொகை ரூ.2000 வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>