×

கையெழுத்து இல்லாமல் அறிக்கை தாக்கல் செய்த விவகாரம்: கலெக்டர் போன்ற உயர் அதிகாரிகள் கவனத்துடன் செயல்பட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை:  நீதிமன்றங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்போது கலெக்டர் போன்ற உயர் அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இடங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக  அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுத் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வக்கீல் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி, வருவாய்துறை அதிகாரிகள் வழக்கில்  சேர்க்கப்படவில்லை என்றாலும் வருவாய்துறை செயலாளர் சேர்க்கப்பட்டுள்ளார்.

 எனவே, அறிக்கை தாக்கல் செய்ய சாக்குபோக்கு சொல்ல கூடாது. எனவே, இந்த வழக்கில் சென்னை கலெக்டர் ஏப்ரல் 16ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். வழக்கு ஏப்ரல் 16ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை கலெக்டர் ஆர்.சீத்தாலட்சுமி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கலெக்டர் கையெத்திடாமல் அவரது  தனி உதவியாளர் அபிசேஷகம் (சென்னை மாவட்ட நில நிர்வாகம்) கையெழுத்திட்டிருந்தார்.

 அறிக்கையை பார்த்த நீதிபதி, கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நிலையில் அவர் சார்பில் வேறு நபர் அறிக்கை தாக்கல் செய்ததை ஏற்க முடியாது. எனவே, கலெக்டர் மீது  ஏன் உரிய நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று இந்த நீதிமன்றம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்கிறது என்று உத்தரவிட்டார். இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை கலெக்டர் சீத்தாலட்சுமி ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், நீதிமன்றம் பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும்  தவறாமல் செயல்படுத்தி வருகிறோம். இந்த வழக்கில் அறிக்கையை கூடுதல் அரசு பிளீடரிடம் ஏப்ரல் 16ம் தேதி தரப்பட்டது. ஆனால், அரசு வக்கீல் ஒப்புதல் தரவில்லை.

இந்த நிலையில் அறிக்கையின்  முக்கியத்துவம் ெதரியாமல் கலெக்டரின் தனி உதவியாளர் கையொப்பமிட்டு தாக்கல் செய்துவிட்டார். இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. எனவே, இந்த தவறுக்கு மன்னிக்கவேண்டும் என்று  கோரப்பட்டிருந்தது.  மனுவை பரிசீலித்த நீதிபதி, இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தேதி குறிப்பிடப்படவில்லை. கையெழுத்துடன் தேதியை குறிப்பிட வேண்டும். நீதிமன்றம் இந்த மனுவை ஏற்றுக்கொள்கிறது.  இருந்தபோதிலும், தேதி குறிப்பிடாத மனுவை கலெக்டர் போன்ற உயர் அதிகாரிகள் தாக்கல் செய்யக்கூடாது. இந்த விஷயத்தில் கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று  உத்தரவிட்டார். விசாரணை ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.




Tags : Chennai High Court , Matters filed without signature: Top officials like Collector should act with caution: Chennai High Court instruction
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை...