ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவில் பெட்ரோல் ரூ.100ஐ தாண்டியது

* 5 நாட்களில் லிட்டருக்கு ரூ.1.14 உயர்வு

* சென்னையில் ரூ.93.38க்கு விற்பனை

சென்னை: மகாராஷ்டிராவில் நேற்று பெட்ரோல் ஒரு லிட்டர் ₹100ஐ தாண்டியது. பர்பானியில் ஒரு லிட்டர் ரூ.100.20க்கும் மும்பையில் ரூ.97.86க்கும் விற்கப்பட்டது. சென்னையில் பெட்ரோல் 23 காசுகள்  உயர்ந்து ரூ.93.38ஆகவும், டீசல் 31 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.86.96க்கு விற்பனையானது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, இறக்குமதி செலவு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள்  தினசரி மாற்றி அமைக்கின்றன. ஆனால், 5 மாநில தேர்தலை முன்னிட்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் கடந்த மே 2ம் தேதி சற்று உயர்ந்த பெட்ரோல் விலை, கடந்த 4ம்  தேதியில் இருந்து 4 நாட்கள் தொடர்ந்து உயர்த்தப்பட்டது.

பின்னர் 2 நாட்கள் விலை மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், பெட்ரோல், டீசல் விலை நேற்று மீண்டும் உயர்த்தப்பட்டது. இதன்படி  சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து ரூ.93.38 ஆகியுள்ளது. பிற நகரங்களை பொறுத்தவரை டெல்லியில் ரூ.91.53, மும்பையில் ரூ.97.86, சென்னையில் ரூ.93.38, கொல்கத்தாவில் ரூ.91.66 என  விற்பனையானது. இதுபோல் டீசல் விலை சென்னையில் நேற்று 31 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.86.96க்கு விற்பனையானது.

பிற நகரங்களை பொறுத்தவரை, டெல்லியில் ரூ.82.06, மும்பையில் ரூ.89.17, கொல்கத்தாவில் ரூ.84.90 என உயர்ந்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் விலை ஏற்கெனவே ரூ.100ஐ தாண்டி  விட்டது. இதில் தற்போது மகாராஷ்டிராவும் இணைந்து விட்டது. மகாராஷ்டிர மாநிலம் பர்பானியில் பெட்ரோல் ரூ.100.20 ஆனது. ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் ரூ.102.42 ஆகவும், மத்திய  பிரதேசம் அனுப்பூரில் ரூ.102.12 க்கும் விற்பனையானது. நாட்டின் சில பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது இந்த ஆண்டில் இது 2வது முறையாகும்.

தேர்தலுக்கு பிந்தைய 5 நாட்கள் உயர்வில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.14, டீசல் விலை ரூ.1.33 அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 24ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15ம் தேதி வரை பெட்ரோல்  லிட்டருக்கு 67 காசுகளும், டீசலுக்கு 74 காசுகளும் மட்டுமே குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பையும் தாண்டி கடந்த 5 நாள் விலை உயர்வு ஈடு செய்து விட்டது.

Related Stories:

>