×

சிபிசிஐடி, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம் ஏன்? பரபரப்பு தகவல்கள்

சென்னை: சிபிசிஐடி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் உள்ள அதிகாரிகள் மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகள் மாற்றப்பட்டது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. 10 ஆண்டுஅதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்தது. கடந்த 4 ஆண்டுகளில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்தன. இது குறித்து திமுக பல்வேறு புகார்களை ஆதாரங்களுடன் விசாரணை நடத்தும்படி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தது. மேலும், சில அமைப்புகளும் புகார் செய்தன.

ஆனால் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பலர் அதிமுக அனுதாபிகளாக உள்ளனர். பலர் உறவினர்களாகவும் உள்ளனர். இதனால் வழக்கில் முகாந்திரம் இல்லை என்று மூடிவிட்டனர். நீதிமன்ற கண்டனத்துக்குப் பிறகு வழக்குகள் விசாரிக்க தொடங்கினர். ஆனாலும் ஒரு பக்கத்தைக் கூட அவர்கள் புரட்டிப் பார்க்கவில்லை. பல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீதான புகார்கள் அப்படியே தூங்கி வழிகின்றன.

குறிப்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் அதிகாரிகள் மீது புகார்கள் வந்தாலும், உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கச் சொன்னாலும், அந்த மண்டலத்தைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நேராக அமைச்சரிடம் சென்று, புகாருக்குள்ளான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாமா என்று கேட்டு விட்டுத்தான் ரெய்டுக்கே செல்லும்நிலையே நிலவியது. இதனால் லஞ்ச ஒழிப்புத்துறையையே முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால்தான் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நேர்மையான, சிபிஐ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் திறம்பட பணியாற்றிய டிஜிபி கந்தசாமி, இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல, சிபிசிஐடியிலும் பல புகார்கள் ஆளும் கட்சியினர் மீதும், அமைச்சர்கள் மீதும் கொடுக்கப்பட்டன. அந்த புகார்கள் மீதும் உரிய விசாரணை நடத்தப்படவில்லை. பல பொய்யான புகார்கள் மீது எதிர்க்கட்சியினர் மீது சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தனர். சிபிசிஐடியில் எஸ்பிக்கள் அளவில் நல்ல அதிகாரிகள் உள்ளனர். ஆனால் உயர் பதவியில் உள்ள பலர் ஆளும் கட்சிக்கு ஆதரவு நிலை எடுத்து வந்தனர். இதனால் தேர்தல் நேரத்தில் சிபிசிஐடியில் பணியாற்றிய பலரும் நல்ல பதவிக்கு சென்றனர். அதன்பின்னரும் சில அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். குறிப்பாக, சிறப்பு டிஜிபி மீதான வழக்கு உள்ளிட்ட பல புகார்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பலர், சாட்சிகளாகவும் சேர்க்கப்பட்டனர்.

தேர்தலுக்கு முன்னரே அந்த வழக்கை மூட சதி திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் தனது நேரடி கட்டுப்பாட்டில் விசாரணையை எடுத்துக் கொண்டதால், வழக்கு தற்போது நேர்மையாக நடந்து வருகிறது. இதனால் வழக்கின் வேகம் முடக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டு விட்டது. சிபிசிஐடிக்கு புதிய டிஜிபியாக ஷகீல் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், வெடிகுண்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் திறம்பட பணியாற்றியவர். நேர்மையானவர், துணிச்சலானவர் என்று பெயர் எடுத்தவர். இதனால் லஞ்ச ஒழிப்பு மற்றும் சிபிசிஐடியில் டிஜிபி அளவில் நேர்மையான அதிகாரிகள் நியமிக்கப்பட்டது போலீசாரிடையே பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

Tags : CPCIT , Why did the CPCIT and the bribery officers change their action? Sensational information
× RELATED சயானிடம் சிபிசிஐடி போலீசார் 8மணி நேரம் விசாரணை