×

கவர்னர் முன்னிலையில் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பொறுப்பேற்பு

சென்னை: தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி கவர்னர் முன்னிலையில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த 7ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து தற்காலிக சபாநாயகராக கீழ்பென்னாத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டி நியமிக்கப்படுவதாக கடந்த சனிக்கிழமை தமிழக கவர்னரால் அறிவிப்பட்டது. இதையடுத்து கு.பிச்சாண்டி நேற்று காலை 11 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கவர்னர் முன்னிலையில், 16வது சட்டமன்ற பேரவை உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் `உளமாற’ என்று கூறி உறுதிமொழியை தமிழில் எடுத்துக் கொண்டார். இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : K. Pichandy ,Governor , K. Pichandy assumes charge as interim speaker in the presence of the Governor
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...