×

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எப்போது? அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

சென்னை: பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். நீட் தேர்வுக் பயிற்சி அளிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். தமிழகத்தில் நீடித்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மே மாதம் 5ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடக்க இருந்த பிளஸ் 2 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இடையில் சட்டப் பேரவையின் தேர்தல் நடந்தது. தற்போது புதிய அரசு அமைந்துள்ளதால் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நேற்று கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதற்கு பிறகு அவர் அளித்த பேட்டி: நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிளஸ் 2 தேர்வை எப்போது நடத்தலாம் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. சில அதிகாரிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இது மாணவர்களின் எதிர்காலம் பற்றியது. தமிழக முதல்வர் மாணவர்களின் உடல் நலம் தான் முக்கியம் என்பதை உணர்ந்தவர். அதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆலோசனை நடத்தப்பட்டது.  அவரின் கருத்தை கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த ஆலோனை கூட்டம் நடக்கும். அதிலும் சில குழுக்களை அழைத்து பேச உள்ளோம். முதல்வர் தெரிவிக்கும் கருத்துக்கு பிறகு நல்ல முடிவை அறிவிப்போம்.  

பள்ளிக் கல்வித்துறையில், அடிப்படை வசதிகள் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக இருக்காது. நகரப்புறத்தில் ஒரு மாதிரியாகவும், கிராமங்களில் ஒரு மாதிரியாகவும் அடிப்படை வசதிகள் இருக்கும். அதையும் இந்த கூட்டத்தில் ஆலோசித்தோம். அதனால் நகர்புறப் பகுதியில் இருக்கும் ஆசிரியர்கள் கிராமப்பகுதிகளில் இருக்கும் மாணவர்களுக்கும் பாடம் நடத்த வேண்டும் அப்போதுதான் அவர்களுக்கு நல்ல திறன்களை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்வு நடத்துவது பற்றி கூறியவர்கள், மாணவர்கள் வந்து தேர்வு எழுதும் போது, வீட்டில் உள்ள முதியவர்களிடம் இருந்து கொரோனா தொற்றை கொண்டு வந்துவிட்டால் அது மற்ற மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதை குறிப்பிட்டனர்.

அதனால் மாணவர்களின் பாதுகாப்பு தான் முக்கியம். இதை அடிப்படையாக கொண்டு கருத்துகள் விவாதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு செய்முறைத் தேர்வுகளை முடித்து வைத்துள்ளனர். தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கு செய்முறைத் தேர்வு இல்லை. பிளஸ்2 வகுப்புக்கு செய்முறைத் தேர்வு முடித்துள்ளோம். பிரதான தேர்வு இன்னும் நடத்தவில்லை. பத்தாம் வகுப்பை பொறுத்தவரை, மதிப்பீடு எப்படி எடுக்கலாம், கடந்த தேர்வில் இருந்து ஏதாவது எடுக்கலாமா, அகமதிப்பீட்டில் இருந்து எடுக்கலாமா என்பது குறித்து ஆலோசித்துள்ளோம். கண்டிப்பாக அதற்கும் நல்ல தீர்வை எடுப்போம் என்றார்.

* நீட் தேவையில்லை என்பது திமுக முடிவு
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மேலும் கூறுகையில், நீட் பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. நீட் ஏற்க மாட்டோம் என்பது திமுக கொள்கை. அதனால் முதல்வர் தெரிவிப்பதின் பேரில் முடிவு எடுக்கப்படும். பயிற்சியை பற்றியும் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றார்.


Tags : Tamil Nadu , When is the Plus 2 exam in Tamil Nadu? Ministerial consultation with officials
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...