கொரோனா முழு ஊரடங்கால் தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகள், மார்க்கெட்டுகள் வெறிச்சோடின: சாலையில் சுற்றியவர்களிடம் கனிவுடன் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்; மக்கள் நடமாட்டம் டிரோன் மூலம் கண்காணிப்பு

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 15 நாள் முழு ஊரடங்கு நேற்று தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மருத்துவ வல்லுநர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, 10ம் தேதி அதிகாலை 4 மணி முதல் வரும் 24ம் தேதி அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு பிறப்பித்து உத்தரவிட்டார்.

இந்த முழு ஊரடங்கு காலத்தில் பால், காய்கறி, பலசரக்கு கடைகள் காலை 6 மணி முதல் 12 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. மற்ற கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், வார சந்தைகள் என அனைத்தும் மூடப்பட்டது.பின்னர் அறிவித்தப்படி நேற்று அதிகாலை 4 மணி முதல் முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கை முழுமையாகநடைமுறைப்படுத்தும் பணியில் டிஜிபி திரிபாதி மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் உத்தரவுப்படி 1 லட்சம் போலீசார் ஈடுபட்டனர். 38 மாவட்ட எல்லைகள் என 250க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக போலீசார் கண்காணித்தனர்.

அரசு அனுமதி அளித்த வாகனங்கள் மற்றும் அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களை தவிர மற்ற யாரையும் போலீசார் வெளியே செல்ல அனுமதி வழங்க வில்லை. போலீசாரின் உத்தரவை மீறி தொடர்ந்து சாலையில் சுற்றிய நபர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு சம்பந்தப்பட்ட நபரிடம் இனி இதுபோன்று சாலையில் சுற்றமாட்டேன் என்று எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.

முழு ஊரடங்கு குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர். முழு ஊரடங்கு காலத்தில் திறக்கப்பட்ட கடைகள் அனைத்து மதியம் 12 மணிக்கு மூடப்பட்டது. முக்கிய நகரங்களான மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், மாநிலம் முழுவதும் அனைத்து நெடுஞ்சாலைகள், மார்க்கெட்டுகள் அனைத்தும் மக்கள் இன்றி வெறிச்சோடியே காணப்பட்டது.

சென்னையை பொறுத்தவரை போலீஸ் கமிஷனர் ஷங்கர் ஜிவால் உத்தரவுப்படி மாநகரம் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய சாலைகள் என 200 இடங்களில் சட்டம் ஒழுங்கு போலீசாரும், 118 இடங்களில் போக்குவரத்து போலீசாரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  35 பெரிய மேம்பாலங்களை போலீசார் தடுப்புகள் அமைத்து மூடினர். இதுதவிர பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் மாநகரம் முழுவதும் 12 துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் தலைமையில் 360 ரோந்து வாகனங்களில் சுற்றி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் போலீசார் ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட டிரோன் உதவியுடன் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

Related Stories:

>