முழு ஊரடங்கு எதிரொலி ; வேலூர் மாவட்டத்தில் 9 சோதனை சாவடி அமைத்து போலீசார் கண்காணிப்பு

வேலூர்: கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்த இன்று முதல் 14 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மாவட்டத்தில் 9 சோதனை சாவடிகளில் போலீசார் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள கொரோனா 2வது அலையின் பாதிப்பை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் இன்று 10ம் தேதி தொடங்கி வரும் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வது, ஆம்புலன்ஸ் சேவை, பத்திரிகை வினியோகம், தீயணைப்பு வாகனங்கள் என அவசர, அத்தியாவசிய போக்குவரத்து தவிர்த்து ஆட்டோ, டாக்ஸி சேவை, பஸ் உட்பட பொது போக்குவரத்துக்கு முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்கள், கொரோனா முன்கள பணியாளர்கள் தங்கள் பணியிடங்களுக்கு சென்று வர அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மளிகை கடைகள், டீக்கடைகள், மீன், இறைச்சி கடைகள், ஓட்டல்கள் ஆகியவை பார்சல் சேவையுடன் மதியம் 12 மணி வரை மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஊரடங்கை முழுமையான அளவில் அமல்படுத்தவும், கண்காணிக்கவும் ஏற்கனவே மாவட்ட எல்லைகளான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, பிள்ளையார்குப்பம், மாதனூர், கணியம்பாடி கீழ்வல்லம், பரதராமி, சேர்க்காடு, பொன்னை மாதாண்டகுப்பம், தனகொண்டபல்லி உட்பட 9 மாநில, மாவட்ட சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் கண்காணிப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர 57 இடங்களில் கூடுதல் காவல் கண்காணிப்பு சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 900 போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories:

>