×

பெங்களூருவில் கொரோனா ஊரடங்கால் குற்ற சம்பவங்கள் குறைந்து சைபர் குற்றங்கள் அதிகரிப்பு

பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக உயர்ந்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பெங்களூருவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் பெங்களூருவில் குற்ற சம்பவங்கள் நடைபெறுவது குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

பெங்களூருவில் தினமும் ஒரு கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, சங்கிலி பறிப்பு, வீடுகள், கடைகளில் திருட்டு என குற்ற சம்பவங்கள் நடைபெறும். இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் கொடுக்க வருவதால் போலீஸ் நிலையங்கள் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பதால், குற்றங்கள் நடைபெறுவது குறைந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு ஒரு மாதத்திற்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருக்கும். ஆனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து வீட்டு திருட்டு, இரவு நேரங்களில் நடைபெறும் கொள்ளை, பஸ் நிலையங்களில் பயணிகளிடம் செல்போன் பறிப்பு, மோதல் உள்ளிட்ட பல குற்றங்கள் நடைபெறவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெங்களூரு நகரில் 70 சதவீத குற்றங்கள் நடைபெறுவது இந்த ஊரடங்கு காரணமாக குறைந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் தகவல் தொழில்நுட்ப நகரான பெங்களூருவில் கொரோனா ஊரடங்கு காலத்திலும் சைபர் கிரைம் குற்றங்கள் மட்டும் குறையாமல் அதிகரித்து வருவதாகவும் போலீசாா் கூறியுள்ளனர். ஆக்சிஜன் சிலிண்டரை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பெண் போலீசிடமே ரூ.9 ஆயிரம் பெற்று சைபா் கொள்ளையர்கள் மோசடி செய்திருந்தனர். இதுபோன்று சைபர் குற்றங்கள் மட்டும் அதிகரித்து வருவதாகவும், இதற்காக மக்கள் உஷாராக இருக்க வேண்டியது அவசியம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.



Tags : Corona ,Bangalore , Bangalore
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...