×

கொரோனா முழு ஊரடங்கின்போது முதல்வரின் உத்தரவுப்படி பொதுமக்களிடம் விழிப்புணர்வு மட்டுமே ஏற்படுத்த வேண்டும்

* துன்புறுத்துதல், மிரட்டுதல், மரியாதை குறைவாக நடத்தக்கூடாது
* போலீசாருக்கு டிஜிபி திரிபாதி அறிவுரை

சென்னை : கொரோனா முழு ஊரடங்கின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு மட்டுமே ஏற்படுத்த வேண்டும். துன்புறுத்தவோ, மிரட்டல் விடுக்கவோ, மரியாதை குறைவாக நடத்தவோக் கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி போலீசாருக்கு டிஜிபி திரிபாதி அறிவுரைகள் வழங்கி உள்ளார்.

கொரோனா முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி திரிபாதி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைகண்ணன், உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி டிஜிபி திரிபாதி மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைகண்ணன் ஆகியோர் அனைத்து மண்டல ஐஜிக்கள், போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்கள் உடன் நேற்று முன்தினம் காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.


இந்த கூட்டத்தில் முழு ஊரடங்கின் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைகண்ணன் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, டிஜிபி திரிபாதி நேற்று போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* காவலர்களை சுழற்சி முறையில் பணியில் அமர்த்தி ஒவ்வொருவரும் 5 மணி நேரம் ஷிப்ட் முறையில் பணியாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கொரோனா நோய் தடுப்பூசிகளை முழுமையாக எடுத்து கொண்டுள்ள காவலர்களை மட்டுமே கூட்டம் கூடும் இடங்களான மார்க்கெட் போன்றவற்றில் பணி அமர்த்த வேண்டும்.

பொதுமக்கள் மற்றும் பிற அரசு துறை அதிகாரிகளிடம் பின் பற்ற வேண்டிய வழிமுறைகள்:

* பொதுமக்களிடம் காவல் துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ பொதுமக்களிடம் நடந்து கொள்ள கூடாது.

*பிற அரசுத் துறைகளின் பணிபுரியும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், வருவாய்துறையினர், உள்ளாட்சி மற்றும் நகராட்சி துறையினர், தூய்மை பணியாளர்கள் போன்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

* பொது ஒலிபெருக்கியை பயன்படுத்தி மார்க்கெட் போன்ற இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.

* தடியடி நடத்தி அல்லது பலப்பிரயோகம் செய்து கூட்டத்தை கலைப்பது போன்ற காரியங்களில் எந்த சூழ்நிலையிலும் ஈடுபடக்கூடாது.

* பொதுமக்களை கண்ணியமான முறையில் அறிவுறுத்தி அவர்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

* டிரோன் கேமராக்களை பயன்படுத்தி பொதுமக்கள் கூட்டமாக கூடுகிறார்களா என்பதை கண்காணித்து முறைப்படுத்த வேண்டும்.

வணிகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளை கையாளுதல்:

* வணிகர்கள், சிறு வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோர்களிடம் கனிவான முறையில் நடந்து கொள்ள வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்த பின்பு அவர்களிடம் வியாபாரத்தை முடித்து கொள்ளுமாறு கண்ணியமான முறையில் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

*சாலையோர வியாபாரிகளிடம் மிகுந்த மனிதாபிமனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.அவர்களை கடுமையான முறையில் நடத்துதல் கூடாது.

* அத்தியாவசிய பொருட்களின் தடையில்லா போக்குவரத்தை உறுதி செய்தல்:

* ஊரடங்கு காலகட்டத்தில் பால், மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை எடுத்து செல்லும் வாகனங்கள், மருந்துவ பொருட்கள் மற்றும் மருந்துகள், இதர உபகரணங்கள் எடுத்து செல்லும் வாகனங்களை தடையின்றி செல்வதை உறுதி செய்தல் வேண்டும்.

* ஆக்சிஜன் சிலிண்டர் எடுத்து செல்லப்படும் வாகனங்கள் தடையின்றி செல்வதை உறுதி செய்ய வேண்டும். தேவைப்படும் நேரங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் வாகனங்களுக்கு பாதுகாப்பு வாகனம் பின் தொடர அவை எடுத்து செல்லப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்:

* பொதுமக்கள் ஊரடங்கு காலகட்டத்தில் தங்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்த வேண்டும்.

* கிராமப்பகுதிகளில் தண்டோரா அடித்து பொதுமக்களிடம் கொரோனா நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்த வேண்டும்.

காவல் நிலையத்தின் செயல்பாடுகள்:

*காவல் நிலையத்தில் குற்றவாளிகள் வைக்க வேண்டிய பட்சத்தில் சம்பந்தப்பட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் முன் அனுமதியை பெற வேண்டும்.  காவல் நிலையத்தின் வெளியே சாமியானா பந்தல் போடப்பட்டு மனுதாரர்கள் மற்றும் பார்வையாளர்கள் அங்கே அமர வைக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.

* காவல் நிலையத்தில் உள்ளே பொதுமக்கள் வருவதை அனுமதித்தல் கூடாது.

சட்டம் ஒழுங்கு பராமரித்தல்:

* சட்டமன்ற கூட்டத் தொடர் மற்றும் ரம்ஜான் பண்டிகை ஆகியவை வருவதால் தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வண்ணம் உறுதி செய்தல் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாகனங்கள் பறிமுதல் கூடாது

* ஊரடங்கு விதிமுறைகளை மீறும் வாகனத்தை புகைப்படம் எடுத்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

* ஊரடங்கு விதிமுறை மீறலுக்காக வாகனத்தை கைப்பற்றுதல் கூடாது, அப்படியே வாகனத்தினை கைப்பற்றினாலும் சில மணி நேரங்களில் அவற்றை விடுவித்தல் வேண்டும்.

* இ-பாஸ் வைத்து பயண அனுமதி பெற்றுள்ள வாகனங்களை அரசின் வழிகாட்டுதல் விதிமுறைகள் படி அனுமதித்தல் வேண்டும்.

* அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்கள் தடையின்றி செல்வதற்கான வழியை ஏற்படுத்துதல் வேண்டும்.

* பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை காவல்நிலையத்தில் நிறுத்த கூடாது. காவல் நிலையத்தின் அருகே உள்ள மைதானத்தில் நிறுத்த வேண்டும்.

Tags : Corona ,Chief Minister , Chennai: Police on security duty during the entire Corona curfew only to create awareness among the public
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...