×

சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கும் மையம் திறப்பு தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இயற்கை முறை மருத்துவ மையங்கள்-சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை : டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கும்  மையம் திறக்கப்பட்டது. மேலும் 12 மாவட்டங்களில் இயற்கை முறை மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  கூறினார்.

தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்  சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-45, டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ முறையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மையத்தை திறந்து வைத்து ஆய்வு செய்தார்.

பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் கடந்தாண்டு செயல்பட்டு வந்த சித்தா கோவிட் மையம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 240 படுக்கை வசதிகளுடன் துவக்கப்பட்டுள்ள இம்மையத்தில் 195 நபர்கள் மிதமான அறிகுறிகளுடன் கோவிட் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இம்மையத்தின் மூலம் கடந்தாண்டு 2,290 நபர்கள் கோவிட் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.

மேலும், தமிழகம் முழுவதும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி போன்ற இயற்கை முறை மருத்துவமனைகள் விரிவுபடுத்தப்படும்.தமிழ்நாட்டில் தர்மபுரி, தேனி, நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, அரியலூர், தென்காசி, மதுரை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் இயற்கை முறை மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்.

மேலும், ஒருவாரத்திற்குள்ளாக தென்சென்னையில் ஜெயின் கல்லூரியில் 70 படுக்கைகளுடன் சித்தா கோவிட் மையம் துவக்கப்படவுள்ளது. மேலும் இயற்கை முறை மருத்துவத்தில் 1,410 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களை ஒருங்கிணைத்து மேலும் பல இடங்களில் இயற்கை முறை மருத்துவ மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உள்மருந்துகளாக கபசுரக்குடிநீர், அமுக்கராசூரண மாத்திரை, பிரம்மானந்தபைரவ மாத்திரை, தாளிசாதி சூரணம், ஆடாதொடை மணப்பாகு ஆகியவையும் வெளிமருந்துகளாக கற்பூராதி தைலம், பெயின்பாம் போன்றவைகளும், உணவே மருந்து என்ற அடிப்படையில் தினமும் காலையில் சீரான குடிநீர், மாலையில் கரிசாலை பால், இரவில் சுக்கு கஞ்சி ஆகிய சிறப்பு மூலிகை வகை உணவுகள் நோயாளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், புற சிகிச்சைகளாக காலையில் திறந்தவெளியில் சித்தர் யோகா, திருமூலர்பிராணாயாமம், வர்மசிகிச்சை சித்தர் முத்திரைகள், மூலிகை நீராவிசிகிச்சை மற்றும் மனநல ஆலோசனைகள் ஒருங்கிணைந்த வகையில் நோயாளிகளுக்கு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மாநகராட்சி சார்பில் 11800 களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். அதனை நானே நேரில் சென்று தினமும் ஆய்வு செய்யவுள்ளேன். மேலும்,  21 கோவிட் பரிசோதனை மையங்களை 30 ஆக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்  ஆர்.டி.சேகர் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

எப்போதும் உதவி செய்ய தயார்

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியில் இருந்து காலை 4 மணி வரை எனக்கு 77 பேர் போன் செய்தனர். அவர்களுக்கு குறிப்பிட்ட மருத்துவமனைகளில் இடமும்,  ஆக்சிஜன் வசதியும் செய்து கொடுத்துள்ளேன். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளார்கள்  என்ற பிம்பத்தை தயவு செய்து உண்டாக்காதீர்கள். ஆக்சிஜன் வசதி மற்றும் மருத்துவமனைகளில் இடம் இல்லையென்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்  எந்த நேரத்தில் உங்களுக்கு உதவி செய்ய தாயராக இருக்கிறேன் என்று உருக்கமாக கூறினார்.

Tags : Siddha Medical Centers ,Tamil Nadu ,Ma Subramanian , Chennai: Dr. Ambedkar Government Arts College has opened a center for the treatment of paranormal medicine. And more
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...