முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் கொரோனாவை கட்டுப்படுத்த முக்கிய முடிவுகள்

* தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில், கொரோனாவை கட்டுப்படுத்துவது மற்றும் ஊரடங்கு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பாக 6 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

தமிழக முதல்வராக கடந்த 7ம் தேதி மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும், புதுப்புது கட்டுப்பாடுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து வருகிறார். அந்தவகையில், தமிழகத்தில் இன்று முதல் வரும் 24ம் தேதி வரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் முழு ஊரடங்கை சரிவர கடைபிடித்து கொரோனாவை விரட்ட முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில், புதிய அரசு பொறுப்பேற்று முதல் அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று காலை 11.30 மணிக்கு நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரை முருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ரகுபதி, செந்தில்பாலாஜி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிப்பது குறித்து 6 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அவை:

* நமது மாநிலத்தில் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் நமது அரசு நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்திட உள்ளது. இந்த ஊரடங்கு சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே, தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தி, இறப்புக்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். எனவே, அமைச்சர்கள் அனைவரும் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களில் இந்த ஊரடங்கு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.

* மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் அங்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும். இந்த மருத்துவமனைகளில் உள்ள வசதிகளையும் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான தரமான உணவு  போன்ற வசதிகளை மேம்படுத்திட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

* தமிழகத்தில் தற்போது பல நெருக்கடிகளுக்கிடையே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த ஆக்ஸிஜன் முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்திடவும், எந்தவிதமான சூழலிலும் ஆக்ஸிஜன் வீண் போகக் கூடாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

* சென்னை மட்டுமின்றி கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களிலும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்து அரசால் விற்பனை செய்யப்படுகிறது.  இந்த விற்பனையை கண்காணிப்பதோடு, இத்தகைய மருந்துகள் கள்ளச்சந்தையில், விற்பனையாவதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

*  தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் தடுப்பூசி போடப்படுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசிப் பயன்பாட்டை உயர்த்துவற்கு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி முனைப்பாக செயல்பட வேண்டும்.

* மருத்துவத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே மேற்கூறிய நடவடிக்கைகளில் வெற்றி பெற இயலும். எனவே, அமைச்சர்கள் அனைவரும் இத்துறைகளை ஒருங்கிணைத்து ஆய்வு கூட்டங்களை நடத்தி, அனைவரும் இணைந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டத்தில்

பேசினார்.

* அமைச்சர்கள் அனைவரும் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களில் ஊரடங்கு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.

* ரெம்டெசிவர் மருந்து விற்பனையை கண்காணிப்பதோடு, இத்தகைய மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பனையாவதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

* தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் தடுப்பூசி போடப்படுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

* மருத்துவத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே மேற்கூறிய நடவடிக்கைகளில் வெற்றி பெற இயலும்.

Related Stories:

>