கொரோனா பரவலை தடுக்க ஆண்டிபட்டி பூ மார்க்கெட் அரசுப் பள்ளிக்கு மாற்றம்-பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் கொரோனா பரவலை தடுக்க பூ மார்க்கெட், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கன்னியப்பபிள்ளைபட்டி, பிச்சம்பட்டி, கோத்தலூத்து, மாயாண்டிபட்டி, கதிர்நரசிங்கபுரம், கொத்தப்பட்டி, சித்தார்பட்டி, தெப்பம்பட்டி உள்ளிட்ட பல ஊர்களில் மல்லிகை, சம்பங்கி, முல்லை, பிச்சி, கோழிக்கொண்டை, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் விளையும் பூக்களை ஆண்டிபட்டியில் வேலப்பர்கோயில் சாலையில் உள்ள பூ மார்கெட்டிற்கு அனுப்புகின்றனர். இங்கிருந்து மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பூ மார்க்கெட் செயல்பட ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்தது. வியாபாரிகள் விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று பூக்களை கொள்முதல் செய்ய பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியது. இதனால், பூக்களை சந்தைப்படுத்த சிரமப்பட்டனர்.

இதையடுத்து பூ மார்கெட்டை மீண்டும் திறக்க வேண்டும் என விவசாயிகளும், வியாபாரிகளும் நேற்று முன்தினம் தேனி - மதுரை நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். அவர்களுடன் போலீசாரும், பேரூராட்சி அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து நகரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேரூராட்சி நிர்வாகத்தினர் தற்காலிக பூ மார்க்கெட் அமைத்தனர். இதில், சமூக இடைவெளியுடன் விவசாயிகள் பூக்களை சந்தைப்படுத்தி வருகின்றனர்.

Related Stories:

>