×

அதிமுகவில் திடீர் திருப்பம்: தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் பதவிக்கு தனபால் பெயரை முன்மொழிந்தார் ஓபிஎஸ்: ஈபிஎஸ் அதிர்ச்சி !

சென்னை: தமிழக சட்டசபையில் அதிமுக குழு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அக்கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் எதிர்கட்சி தலைவர் பதவியை பிடிக்க ஓபிஎஸ்- ஈபிஎஸ் இடையே கடும் மோதல் எழுந்துள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் குவிந்திருந்த அதிமுக தொண்டர்கள் போட்டி போட்டிக் கொண்டு ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸை ஆதரித்து முழக்கங்கள் எழுப்பியதால் தள்ளு முள்ளு மற்றும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் யார்? என்பதை தீர்மானிக்க முடியாமல் அதிமுக அல்லாடிக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே தேர்தலின் போது முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்கும்படி எடப்பாடி பழனிச்சாமி போர்க்கொடி தூக்கிய போது ஓபிஎஸ்சை மூத்த அமைச்சர்கள் சமாதானப்படுத்தினர். அதன் பின்பே எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஓபிஎஸ் முன்மொழிந்தார்.

இந்நிலையில் இந்த தேர்தலில் அதிமுக தோற்றுப் போனது. சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்க வேண்டிய நிலையில், அந்த பதவி யாருக்கு என்பதில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது. அனைத்து முடிவுகளையும் சர்வாதிகாரமாக எடுத்து கொண்டதால் தான் அதிமுக தோல்வியை தழுவியதாக ஓபிஎஸ் குற்றம்சாட்டினார். மேலும் அனைத்து பதவிகளையும் விட்டுக் கொடுக்க முடியாது என்று ஓபிஸ் திட்டவட்டமாக கூறியதால் அதிமுகவில் இருவருக்கும் இடையேயான மோதல் போக்கு கொழுந்துவிட்டு எரிகிறது.

எதிர்கட்சி தலைவர் பதவியை தனக்கு தந்தே ஆக வேண்டும் என்று ஈபிஎஸ் ஒற்றை காலில் நிற்பாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர். அதை விட்டு கொடுக்க மாட்டேன் என்ற முடிவில் ஓபிஎஸ்சும் பிடிவாதமாக உள்ளார். இது தலைவர்களும் பின்வாங்க முடியாது என்பதால் யாரும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்நிலையில், அதிமுகவில் திடீர் திருப்பமாக முன்னாள் சபாநாயகர் தனபாலை எதிர்கட்சி தலைவராக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை விடுத்து வருவது அதிமுகவில் பரபரப்பை மேலும் கூட்டியுள்ளது.

கட்சியின் மூத்த தலைவர் என்ற முறையிலும், ஜெயலலிதா அமைச்சரவையில் கூட்டுறவு துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட்டவர் என்பதாலும், சபாநாயகர் பதவியில் சிறப்பாக செயல்பட்டவர் என்பதாலும் அவரை முன்நிறுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். திங்கள்கிழமை(இன்று காலை) நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்திலும், அதற்கு முன்னதாக கடந்த அலுவலகத்தில் நடந்துவரும் மூத்த தலைவர்களின் கூட்டத்திலும் ஓபிஎஸ் வலியுறுத்தினார். மேலும் தலித் ஒருவரை எதிர்கட்சி தலைவராக்குவது கட்சிக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தாராம்.

மேற்கு மாவட்டங்களில் தலித் மற்றும் கவுண்டர்களுக்கு இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், தலித் ஒருவர் பெயரை ஓபிஎஸ் முன்மொழிந்து வருவது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி, தனபாலை வேண்டாம் என்று சொன்னால் தலித் ஒருவரை புறக்கணிப்பதாகிவிடும். எனவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போன்று ஓபிஎஸ் எதிர்கட்சி தலைவர் பதவிக்கு தனபாலை முன்மொழிந்துள்ளார். இதனால் தலித் எம்எல்ஏக்கள் தனபாலை ஆதரிக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இருவரும் வேண்டாம் என்று புதிதாக ஒருவரை ஓபிஎஸ் முன் மொழிந்தது கூட்டத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனாலும், எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் எதிர்கட்சி தலைவர் பதவியை அவருக்கு தான் வழங்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இரு தரப்பிலும் தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இன்றும் முடிவு எடுக்கப்படாத நிலை உருவானால், வாக்கெடுப்பு நடத்தலாம் என்கிற யோசனையை கட்சியின் மூத்த தலைவர்கள் முன்மொழிந்துள்ளதாக கூறப்படுகிறது. சொந்த கட்சியில் ஒரு சட்டசபை குழு தலைவரை தேர்வு செய்ய ஓட்டுப் பெட்டி வைக்கப் போகும் அகில உலக கட்சியாக அதிமுக உருவெடுக்கிறதே என அக்கட்சி சீனியர்கள் ஆதங்கப்படுகின்றனர் .

Tags : TN Legislature ,Opposition , AIADMK, Tamil Nadu Legislative Assembly, Leader of the Opposition, OPS, EPS
× RELATED ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் மீண்டும்...