இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் தமிழக ராணுவ வீரர் பனிச்சரிவில் சிக்கி மரணம்

கண்ணமங்கலம்: திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் இந்தியா- சீனா எல்லையில் பனிச்சரிவில் சிக்கி மரணமடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த ஒண்ணுபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(33).  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்த இவர் `கோர் ஆப் சிக்னல்ஸ்’ என்ற தகவல் தொழில்நுட்ப பிரிவில் ஒயர்லெஸ் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில், இந்தியா- சீனா எல்லையான கேங்டாக் சிக்கிம் பகுதியில்  ராணுவ வீரர் பிரகாஷ் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பனிப்பிரதேசம்  என்பதால் உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும், இன்று (திங்கள்) விமானம் மூலம் அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

23ம் தேதி தங்கையின் திருமணம்: ராணுவ வீரர் பிரகாஷூக்கு ரேவதி(26) என்ற மனைவியும், கவின்(2) என்ற மகனும் உள்ளனர். அவரது 2வது தங்கை மஞ்சுளாவிற்கு வரும் 23ம் தேதி திருமணம் நடக்க உள்ளது. கடைசியாக மனைவி  ரேவதியிடம் பேசிய பிரகாஷ் விடுமுறை கேட்டு உள்ளதாகவும், அடுத்த வாரம் கண்டிப்பாக ஊருக்கு வருவேன் என்றும் கூறியுள்ளார். திருமணத்திற்கு வருவார் என குடும்பமே ஆவலுடன் காத்திருந்த நிலையில், அவரது மரண செய்தி கேட்டு  குடும்பத்தினரும், கிராம மக்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Related Stories:

>