கடந்த ஓராண்டில் நடந்த ‘தகிடுதத்தங்கள் ’ அம்பலம் மதுரை ஆவினில் பல கோடி ரூபாய் முறைகேடு

* தவறான குற்றச்சாட்டால் தற்கொலை செய்த மேலாளர்

* தனி அதிகாரி விசாரணையில் வௌியான திடுக் தகவல்

மதுரை: மதுரை ஆவினில் கடந்த ஓராண்டில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதும், தவறான குற்றச்சாட்டால் மேலாளர் தற்கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மதுரை ஆவினில் பால், நெய், வெண்ணெய் உள்ளிட்ட  உபபொருட்கள் உற்பத்தி செய்து, விற்பனை செய்யப்படுகிறது. இதில், கடந்தாண்டு ஏப்ரல் முதல் இவ்வாண்டு மார்ச் வரை, நெய், வெண்ணெய் உற்பத்தியில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக ஆவின் நிர்வாக இயக்குநருக்கு புகார்கள்  தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொதுமேலாளர்கள் ஆய்வு நடத்தினர். இதில் ரூ.13.71 கோடி முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இதனை உறுதிசெய்வதற்காக சென்னை ஆவின் துணைப்பதிவாளர் அலெக்ஸ் தலைமையிலான  குழு கடந்த சில நாட்களாக மதுரை ஆவினில் விசாரணையிலும், தணிக்கையிலும் ஈடுபட்டது.  இதில், ரூ.13.71 கோடி முறைகேடு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக உதவி பொதுமேலாளர்கள் கிருஷ்ணன், சேகர், மேலாளர்  மணிகண்டன், துணை மேலாளர் வினிதா உட்பட 5 பேரை ஆவின் இயக்குநர் நந்தகோபால் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

 இந்தக்குழு தொடர்ந்து நடத்திய விசாரணையில், உற்பத்தி மட்டுமின்றி ஆவணங்களில் திருத்தம், பில்கள் மோசடி, நூதன தரக்கட்டுப்பாடு மோசடி என பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தது. இதுகுறித்து ஆவின் அதிகாரி ஒருவர்  கூறியதாவது: பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி தனிக்குழு விசாரணை நடத்தியது. பல நுணுக்கமான மோசடிகள் நடந்துள்ளதை அவர்கள் கண்டுபிடித்து உறுதி செய்துள்ளனர்.  மதுரை ஆவினில் இருந்து திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்க  2 டன் நெய் அனுப்ப அனுமதி பெறப்பட்டது. இதற்காக கடந்தாண்டு பிப். 4ம் தேதி 7,500 கிலோவும், பிப். 15ம் தேதி 15 ஆயிரம் கிலோ நெய்யும் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.10 கோடி. ஆனால் தணிக்கையில் இத்தகவல் இல்லை.  திருப்பதி கோயில் பெயரில் 22.50 கிலோ நெய் அனுப்பியதாக காட்டி விட்டு, வெளிமார்க்கெட்டில் கொள்ளை லாபத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

சென்னை ஆவினுக்கு 6 டன் வெண்ணெய் அனுப்பப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெண்ணெய் சென்னைக்கு போகவில்லை. இங்கு தயாரிக்கப்பட்ட நெய், வெண்ணெய் ஆகியவற்றை வெளிமார்க்கெட்டில், தனியாருக்கு ரூ.3  கோடிக்கு விற்பனை செய்ததாக ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. மறுநாளே அந்த ரசீது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அதாவது முதல்நாள் விற்பனைக்காக வெளியே கொண்டு செல்லப்பட்ட நெய், மறுநாள் அந்த ஆர்டர் கேன்சல் செய்யப்பட்டுள்ளது.  ஆனால் வெளியே சென்ற நெய் ஆவினில் மீண்டும் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. இதனை மறைக்க மொத்த நெய் இருப்பில் போலி கணக்குகள் மூலம் சரிசெய்யப்பட்டுள்ளதாக குழு கண்டுபிடித்துள்ளது.  132 டன் வெண்ணெய் பற்றாக்குறை  ஏற்பட்டுள்ளதாக மேலாளர் புகழேந்தி மீது கடந்தாண்டு குற்றச்சாட்டு கூறி அவரை ஆவின் பொதுமேலாளர் சஸ்பெண்ட் செய்தார். இதனால் மனமுடைந்த மேலாளர் புகழேந்தி தற்கொலை செய்தார்.

உண்மையில், மொத்த இருப்பு கணக்கெடுப்பில் கவனக்குறைவாக சம்பந்தப்பட்ட 13z2 டன் வெண்ணெய்  விடுபட்டுள்ளது. பின்னர் அதனை சேர்த்துள்ளனர். இத்தகவல் மறைக்கப்பட்டுள்ளதாக தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயரதிகாரிகளின் தவறான நடவடிக்கையால் ஒரு உயிர் இழப்பு ஏற்பட்டது. இது ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆவினில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.5 கோடி வரையிலான  நெய் கடத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோன்ற பல நூதன மோசடிகள் கடந்த ஓராண்டில் நடந்துள்ளது.  ஆவினுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தவறு செய்தவர்களை சஸ்பெண்ட் செய்தால்  மட்டும் போதாது. இழப்பீட்டு தொகையை அவர்களிடமிருந்து வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>