×

ஜிஎஸ்டி ஆலோசனை கூட்டம் உடனே நடத்த வேண்டும்: மத்திய அரசுக்கு கமல் கோரிக்கை

சென்னை,: நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு காலாண்டிலும் ஜிஎஸ்டி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், கடந்த பல மாதங்களாக  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்கவில்லை. கொரோனா பேரிடர் காலத்தில் முகக்கவசம், கிருமிநாசினி, கையுறைகள், கவச ஆடைகள், வெப்பநிலை ஸ்கேனர்கள், ஆக்சிமீட்டர்கள், வென்டிலேட்டர்கள் போன்றவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்பது உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். சிறு மற்றும் குறுவணிகம், விமான போக்குவரத்து, தங்கும் விடுதிகள், உணவகங்கள், கேளிக்கை அரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் பெரிய அங்காடிகள் உள்ளிட்ட எண்ணற்ற தொழில்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. அவற்றை மீட்டெடுக்க தேவையான உதவிகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். மேலும், அதிகாரிகளை அணுகுவதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும். பேரிடர் காலத்தை மனதில் கொண்டு, மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்து  தேவையான முடிவுகளை எடுக்க வசதி யாக, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மத்திய அரசு உடனே நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : GST ,Kamal ,Central Government , GST consultation meeting to be held immediately: Kamal's request to the Central Government
× RELATED ஜிஎஸ்டி கொங்கு மண்டலத்தை...