×

தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக சண்முகசுந்தரம் நியமனம்

சென்னை,: தமிழக அரசின் முக்கியமான பதவிகளில் மாநில அட்வகேட் ஜெனரல் பதவியும் ஒன்றாகும். கேபினட் அமைச்சர் அந்தஸ்துக்கு இணையான பதவி அட்வகேட் ஜெனரல் பதவி.   மாநில அரசுகளுக்கு சட்ட ரீதியான ஆலோசனை வழங்குவதுடன்,   தலைமை வக்கீலாகவும் செயல்படுபவர். கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் மூத்த வக்கீல் விஜய் நாராயண் அட்வகேட் ஜெனரலாக பதவி வகித்தார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். திமுக ஆட்சி அமைக்கப்பட்டவுடன் அட்வகேட் ஜெனரல் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் காலியாக இருக்கும் அட்வகேட் ஜெனரல் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த மூத்த வக்கீல் ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், திமுக ஆட்சி காலத்தில் 1989-91ம் ஆண்டுகளில்  கூடுதல் குற்றவியல் வக்கீலாகவும், 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீலாக  பதவி வகித்தவர்.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் 1953ம் ஆண்டு அக்டோபர் 29ல் பிறந்த இவரது பெற்றோர் எஸ். ராஜகோபால், ரங்கநாயகி ஆவர். இவர் தந்தை எஸ். ராஜகோபால் மதுரை மாவட்ட அரசு குற்றவியல் வக்கீலாக  பதவி வகித்தவர். மூத்த வக்கீல் சண்முகசுந்தரம் சட்டப் படிப்பை முடித்துவிட்டு, 1977ம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சலில் வக்கீலாக பதிவு செய்தார். நீதித்துறை மற்றும் நீதிமன்றங்களில் என்.என் என பெருமையுடன் அழைக்கப்படும் மூத்த வக்கீல் என். நடராஜனிடமும், தந்தை எஸ்.ராஜகோபாலிடமும் ஜூனியராக பணியாற்றினார்.  சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் ஆஜராகி திறம்பட வாதம் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷனில், இவர் தமிழக அரசின் சார்பில் வக்கீலாக ஆஜராகி வாதம் செய்தவர். திமுக தொடர்பான பெரும்பாலான வழக்குகளில் ஆஜராகி வெற்றிகண்டவர்.

மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தவர். ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு எதிராக  திமுக சார்பில் ஆஜராகியுள்ளார். திமுக சட்டத்துறை தலைவராக பதவிவகித்து வரும் சண்முகசுந்தரம் பல இளம் வக்கீல்களை உருவாக்கியவர். இவரது ஜூனியர்களான மாநிலங்களவை உறுப்பினர் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட வக்கீல்கள் சட்ட நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Shanmugasundaram ,Advocate General ,Government ,of ,Tamil Nadu , Shanmugasundaram appointed Advocate General of the Government of Tamil Nadu
× RELATED கரூர் பழைய நீதிமன்ற வளாகத்தில் சமரச...