×

எச்சரிக்கைகளை புறக்கணித்து, தகவல்களை மறைத்து மத்திய பாஜ அரசு செய்த தவறுகளே கொரோனா பேராபத்து ஏற்பட காரணம்: லான்செட், ஐஎம்ஏ கடும் விமர்சனம்

புதுடெல்லி: எச்சரிக்கைகளை புறக்கணித்து, தகவல்களை மறைத்து மத்திய பாஜ அரசு செய்த தவறுகளே கொரோனா 2வது அலை பேராபத்தாக மாற காரணம் என லான்செட் இதழும், இந்திய மெடிக்கல் அசோசியேஷனும் (ஐஎம்ஏ) கடுமையாக விமர்சித்துள்ளன. இந்த தேசிய பேரழிவுக்கு பிரதமர் மோடி அரசே பொறுப்பு என்றும் கண்டித்துள்ளன. கொரோனா முதல் அலையில் இருந்து இந்தியா கடந்த ஜனவரி மாத பிற்பகுதியில் மீண்டது. அப்போது தினசரி வெறும் 17,000 ஆக குறைந்த நிலையில், 2வது அலை சுனாமியாக உருவெடுத்தது. 8 வாரங்களில் தினசரி பாதிப்பு 22 மடங்கு அதிகரித்து 4 லட்சத்தை தொட்டுள்ளது. குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய பேராபத்து ஏற்பட காரணம் மத்திய அரசின் தவறுகளே என பிரபல மருத்துவ ஆய்விதழ் லான்செட் விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக லான்செட் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: தொடர்ந்து சில மாதங்கள் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்த நிலையில், 2021 ஜனவரி மாதம் கொரோனாவை வென்று விட்டதாக இந்தியா கருதியது.

2வது அலை ஏற்படும், புதிய கொரோனா உருமாற்றங்கள் தாக்கக் கூடும் என நிபுணர்கள் எச்சரித்த போதிலும், இந்தியா கொரோனாவை வெற்றிகரமாக வீழ்த்தி விட்டது என்ற பிம்பத்தைய மத்திய அரசு காட்டியது. கடந்த ஜனவரி மாதம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடந்திய ஆய்வில், நாட்டின் மக்கள் தொகையில் 21 சதவீதம் பேர் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பதாக கூறியது. இதனால் எஞ்சியவர்கள் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாகவும் எச்சரித்தது. ஆனால் அந்த எச்சரிக்கைகளை புறக்கணித்த மத்திய பாஜ அரசு, அதிவேகமாக வைரசை பரப்ப வழிவகுக்கும் மத நிகழ்ச்சிகளை நடத்த அனுமதித்தது. மிகப்பெரிய அரசியல் பேரணிகளை நடத்தியது. தடுப்பூசி போடும் திட்டத்தையும் விரைவுபடுத்தவில்லை. கொரோனாவுக்கு முடிவு கட்டிவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சரும் தவறான தகவல்களை பரப்பினார். 2வது அலையை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிரான விமர்சனங்களை நீக்குவதிலேயே அரசு அக்கறை காட்டியது.

இது போன்ற அலட்சியங்களால் கொரோனா பேராபத்தாக உருமாற மோடி அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். இந்த அரசாங்கத்தின் கொள்கையும், தவறான அணுகுமுறையும் மன்னிக்க முடியாதது. அமெரிக்காவின் சுகாதார மதிப்பீடு மற்றும் அளவீடு நிறுவனம் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் இந்தியாவில் கொரோனா பலி 10 லட்சமாக இருக்கும் என கணித்துள்ளது. அந்த விளைவு நடந்தால், தேசிய பேரழிவுக்கு மோடி அரசே பொறுப்பேற்க வேண்டும். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் இருந்து நிபுணர்கள் கூறிய சரியான எச்சரிக்கைகளை மோடி அரசு கேட்கத் தவறி விட்டது. தற்போதைய நிலையிலிருந்து மீள வளர்ந்து வரும் மற்றும் மேலும் பரவும் கொரோனா வைரஸ் வகைகளை சிறப்பாக கண்காணிக்கவும், புரிந்து கொள்ளவும், கட்டுப்படுத்தவும் மரபணு வரிசை முறையை விரிவுபடுத்த வேண்டும். சரியான நேரத்தில் அரசாங்கம் துல்லியமான தகவல்களை வெளியிட வேண்டும். என்ன நடக்கிறது, தொற்றுநோய் வளைவை வளைக்க என்ன தேவை என்பதை பொதுமக்களுக்கு விளக்க வேண்டும், இதற்கு நாடு தழுவிய ஊரடங்கு நடவடிக்கைகள் அவசியமாகும்.

இவ்வாறு கூறி உள்ளது. நாட்டின் பெரிய மருத்துவர்கள் அமைப்பான இந்திய மெடிக்கல் அசோசியேஷன் கூறுகையில், ‘‘மோடி அரசு பொருத்தமற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும், தரவு மற்றும் இறப்புகளை மறைத்தது. போதுமான தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்ய ஒரு வரைபடத்தைத் திட்டமிடத் தவறி விட்டது. இதனால் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டு, அதிகமானோர் சரியான நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை பெறத் தவறி விட்டனர்’’ என கூறி உள்ளது.

விஞ்ஞானத்துடன் முரண்படும் கொள்கை
அமெரிக்காவின் டியூக் குளோபல் ஹெல்த் இன்ஸ்டிடியூட்டின் சுகாதார பொருளாதார நிபுணரும் இணை பேராசிரியருமான மனோஜ் மோகனன் கூறுகையில், ‘‘விஞ்ஞானத்துடன் முரண்படும் கொள்கைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தும்போது தான் சவால்கள் தொடங்குகின்றன. விஞ்ஞானிகளை நம்புவதற்கான விருப்பம் உங்களுக்கு இருக்க வேண்டும். இந்தியாவில் மத்திய அரசின் கொள்கைகள் பல இடங்களில் விஞ்ஞானத்திற்கு முரண்பாடாக இருந்துள்ளன. இதுவும் 2வது அலையை கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கான காரணங்களில் முக்கியமானதாகும்’’ என்றார்.

Tags : BJP government ,Corona ,IMA , Ignoring warnings and hiding information is the fault of the BJP government: Coronation: Lancet, IMA
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்